சென்னை: சென்னையில் நேற்று (மே 28) நடைப்பெற்ற கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற துணை குடியரசுத் தலைவர் வெங்கயாநாயுடு கலைஞரை பாராட்டி பேசினார். அப்போது இளம் வயதில் கலைஞரை பார்த்துதான வளர்ந்தேன் என கூறினார். மேலும் அரசியலுக்கு அப்பாற்ப்பட்டு அனைத்து கட்சி பிரநிதிகளும் இந்தியாவின் சிறந்த ஜனநாயகவாதியான கருணாநிதியின் சிலை திறப்பு விழாவுக்கு வந்திருக்க வேண்டும் என இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை: நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகையில், ‘வாழ்வில் ஓர் பொன்னாள். எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நன்னாள் இது என்று முதலமைச்சர் உரையைத் துவக்கினார். தமிழ் நிலத்தை வான் உயரத்துக்கு உயர்த்திய தலைவர் கருணாநிதிக்கு 16 அடி உயர சிலை எழுப்பப்பட்டுள்ளது. பெரியார், அண்ணாவுக்கு இடையில் கருணாநிதியின் சிலை மிகப் பொருத்தமாக அமைந்துள்ளது.
தந்தை பெரியாருக்கும் அறிஞர் அண்ணாவுக்கு இடையில் முத்தமிழரிஞரின் சிலை அமைந்து இருப்பது பொருத்தமாக இருக்கிறது. இருவரிடம் அரசியல் பாடம் படித்த கலைஞரின் சிலை இருவருக்கும் இடையில் அமைந்து இருப்பது கூடுதல் மகிழ்ச்சி. கலைஞரின் கனவுக்கோட்டையான ஓமந்தூரார் தோட்டத்திலேயே சிலை அமைந்து இருக்கிறது. இந்தியாவில் பல குடியரசுத் தலைவர்களையும், நிலையான ஆட்சியையும் உருவாக்க துணை நின்றவர் கலைஞர்.
கலைஞர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்த வெங்கையா நாயுடு:பன்முகத்தன்மை கொண்ட கலைஞர் எந்த துறையில் பயணித்தாலும் அதில் கோலோச்சினார். கலைஞர் அவர்களை கடந்த ஆட்சியாளர்களால் நள்ளிரவில் கைது செய்த போது கைதுக்கு எதிராக குரல் எழுப்பியது குடியரசு துணை தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு தான். கலைஞரின் சிலை திறப்புக்கு யாரை அழைப்பது என்று யோசித்த போது, சட்டென நினைவுக்கு வந்தவர் வெங்கையா நாயுடு தான். மிக சிறந்த நாடாளுமன்ற ஜனநாயகவாதி என்ற பெயர் பெற்ற குடியரசு துணை தலைவரால் கலைஞரின் சிலை திறந்தது சால பொருத்தமானது’ எனக் கூறினார்.
இதனையடுத்து கலைஞரின் சிலை குறித்து, ‘பெரியாரின் ஆசைப்படி, அண்ணாசாலையில் திராவிடர் கழகத்தால் கலைஞருக்கு சிலை அமைக்கப்பட்டது. ஆனால் சில கயவர்கள் அசரின் சிலையை கடப்பாரை கொண்டு பெயர்த்தனர். அப்போதும் கலைஞருக்கு கோபம் வரவில்லை. கவிதை தான் வந்தது."செயல்பட விட்டோர் செயல்படாமல் போன நிலையில், அந்த சின்னத்தம்பி முதுகில் குத்தவில்லை, நெஞ்சில் தான் குத்தினார்" என்று கவிதை எழுதியவர் கலைஞர் என முதலமைச்சர் உரையின் போது பேசினார். வாழ்க வாழ்க வாழ்கவே, தலைவர் கலைஞரின் புகழ் வாழ்கவே என உரையை முடித்தார் முதலமைச்சர்.
குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உரை: இதன் பின்னர் கலைஞர் சிலையை திறந்து வைத்து வெங்கையா நாயுடு பேசினார். ‘கருணாநிதியின் 98-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் சிலையை திறந்துவைத்ததில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இந்தியாவின் சிறந்த மகனின் சிலையை திறந்துதில் பெருமிதம் கொள்கிறேன். அவரின் சிலை திறப்புக்காக அழைத்தபோது, உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
அவரின் அரசியல் வாழ்க்கை எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வுக்காக அர்ப்பணித்தவர். அவரை பார்த்து தான் எனது இளமை காலத்தில் வளர்ந்தேன். நாட்டிலேயே சிறந்த பேச்சாளர் அவர். அவரின் கருத்துகள், அரசியல் அறிவு என்னை பல்வகையில் கவர்ந்துள்ளது. அவரின் வார்த்தை விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும். இந்தியாவிலேயே மிகவும் துடிப்பான முதலமைச்சராக திகழ்ந்தவர் கலைஞர். அருகில் இருக்கும் நெல்லூரில் இருந்து அடிக்கடி வந்து அவரை சந்திப்பேன்.
அனைத்து கட்சிகளும் இருந்திருந்தால் நன்றாக இருக்கும்: பலவேளைகளில் வெவ்வேறு கருத்துகள் இருந்தாலும், கருத்து முரண்பாடுகளை களைந்து அவருடன் நட்பு பாராட்டி இணக்கம் காட்டி வந்தேன். எந்த அரசியல் கொள்கையாக இருந்தாலும், அது மக்களுக்கானது என்று இன்றைய தலைமுறை அரசியல்வாதிகள் எண்ண வேண்டும். ஜனநாயகத்தை மதித்து அதை காக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். இந்த நிகழ்ச்சியில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, அனைத்து கட்சிகளும் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
வேற்றுமையில் ஒற்றுமை தான் நமது இந்தியாவின் அடையாளம், பலம். விவசாய வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, தகவல் தொழிநுட்ப தொழில் வளர்ச்சியை முன்னேறியவர் கலைஞர். தமிழ்த்தாய் வாழ்த்தை மெருகேற்றிவர் கலைஞர் தான். எமர்ஜென்சியை எதிர்த்த முக்கியமான தலைவர்களின் கலைஞர் ஒருவர். தமிழ்நாட்டின் அரசியல் - சமூக வளர்ச்சியில் கலைஞரின் அகண்ட பார்வையால், தமிழகம் பன்முக தளத்தில் வளர்ச்சி கண்டது. அவரின் வழியில் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறார்.
கலந்து கொண்ட அனைத்து தேர்தலிலும் வெற்றி கண்டவர், 50 ஆண்டுகளுக்கு மேலாக கட்சியின் தலைவராக இருந்தவர் தலைவர் கலைஞர். அவரின் கருத்து, நகைச்சுவை, வசீகரம்(Grammar, Humour, Glamour) தான் அவரை தனித்துவமாக இருக்க உதவியது. அரசியல்வாதி, வசனகர்த்தா, இலக்கியவாதி, எழுத்தாளர், பத்திரிகையாளர் என பன்முகங்களை கொண்டவர் கலைஞர். தாய் மொழி தமிழின் வளர்ச்சிக்காக அதிகமாக உழைத்தவர் கலைஞர் தான்.
மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல் இந்தியாவின் வளர்ச்சி இருக்காது. ஒன்றிய அரசும் மாநில அரசுகளும் ஒற்றுமையாக செயல்பட்டு நீடித்த வளர்ச்சி பாதையில் இந்தியாவை அழைத்து செல்ல வேண்டும். அனைத்து மொழிகளும் அழகானது. ஆனால் தாய் மொழி அனைத்தையும் விட சிறந்தது. அதனை வளர்க்க, சிறப்பு கொள்ள எப்போது நாம் உழைக்க வேண்டும். தாய் மொழிக்கும், தாய் நாட்டுக்கும் பெருமை சேர்க்க வேண்டும். இளைஞர்கள் வீட்டில் தாய் மொழியில் பேச வேண்டும்.
மம்மி, டாடி என்று அழைக்காமல், அம்மா, அப்பா என்று அழைக்க வேண்டும். மற்ற மொழிகளை மதிக்க வேண்டாம், கற்க வேண்டாம் என்று கூறவில்லை. ஆனால் தாய் மொழிக்கு மரியாதை அதிகம் வழங்க வேண்டும். பிற மொழிகளை மக்களிடம் திணிக்க கூடாது. எந்த மொழியையும் அடக்கவோ, ஒடுக்கவோ கூடாது என்று தனது உரையில் குடியரசு துணைத்தலைவர் வெங்கையா நாயுடு பேசினார்.
இந்த விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டணி கட்சி தலைவர்களான கே.எஸ்.அழகிரி, ப.சிதம்பரம், திருமாவளவன், வைகோ, டி.ராஜா, முத்தரசன், கே.பாலகிருஷ்ணன், ஜி.கே.மணி, காதர் மொய்தீன் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். திரைத்துறை பிரபலங்களான நடிகர் ரஜினி, சத்யராஜ், நாசர், கவிஞர் வைரமுத்து மற்றும் முதலமைச்சரின் குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:நவீன அரசியல்வாதிகளுக்கு ஒரு அறிவுரை - துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு