திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பவை பதவி நீக்க வேண்டும் என வலியுறுத்தி, காந்தி மண்டபம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அண்ணா பல்கலைக்கழகத்தை மத்திய அரசிற்கு விட்டு கொடுக்கக் கூடாது எனவும், இட ஒதுக்கீட்டை ஒழிக்க நினைக்கும் துணைவேந்தர் சூரப்பவை பதவி நீக்க வேண்டுமென முழக்கங்கள் எழுப்பபட்டன.
பின்னர் பேசிய உதயநிதி ஸ்டாலின், ”அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பவை இரண்டு ஆண்டிற்கு முன்பு நியமித்தபோதே, திமுக எதிர்த்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக அவர் தன் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்.
பல அறிஞர்களையும், விஞ்ஞானிகளையும் அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கி இருக்கிறது. இஸ்ரோவின் தலைவராகவும் இங்கு படித்தவர்களே உள்ளனர். இப்படி ஏற்கனவே சிறப்பு வாய்ந்த அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தருவதற்கு இவர்கள் யார்? சிறப்பு அந்தஸ்து அளித்தால், ஐஐடிக்குள் யாரும் செல்ல முடியாமல் இருப்பதுபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலையும் மாறிவிடும்.
பல்கலைக்கழகத்திற்கான நிதியை மாணவர்களிடம் திரட்டப்போவதாக துணைவேந்தர் கூறுகிறார். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் படிப்புக்கு 4 ஆண்டுக்கும் சேர்த்து 2 லட்சம் தான் ஆகிறது. ஆனால் சிறப்பு அந்தஸ்து பெற்றால், ஆண்டிற்கு இரண்டு லட்ச ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும். அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தால், அடுத்த போராட்டத்தை பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடத்துவோம்“ எனத் தெரிவித்தார்.
முன்னதாக, கொஞ்ச நாள்களுக்கு முன்னர் இன்ஜினியரிங் படிப்பதற்கு மகாபாரதத்தை படிக்க வேண்டும் என சூரப்பா கூறியதாக உதயநிதி கூறினார். அப்போது அருகில் இருந்தவர், பகவத் கீதை எனக் கூறியவுடன் சுதாரித்துக்கொண்ட உதயநிதி, பகவத் கீதைக்கும் இன்ஜினியரிங் படிப்புக்கும் என்ன தொடர்பு எனக் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பற்றி எரியும் அண்ணா பல்கலைக்கழகம் - உதயநிதி