சென்னை: உலக சுகாதார மையம் கரோனாவை பெருந்தொற்றாக அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939இம் கீழ் கரோனா தொற்று அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இச்சூழலில், இந்தியா முழுவதுமுள்ள பல மாநிலங்களில் நிலவும் கரோனா இரண்டாம் அலையை போலவே, தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது.
இதனை எதிர்த்து போராடுவதற்கு தமிழ்நாடு சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை, பிற துறைகள் மற்றும் இயக்குநகரங்களுடன் இணைந்து தமிழ்நாடு தேசிய நல்வாழ்வு குழு அலுவலகத்தில் கோவிட்-19 ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை அமைத்துள்ளது.
ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் சிறப்பம்சங்கள்
- அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கரோனா தொற்று நோயாளிகளுக்கான படுக்கை வசதி, பிராணவாயு இருப்பு ஆகியவற்றை தெரிந்துகொள்ளலாம்
- மாவட்ட வாரியாக உள்ள அரசு இயக்குநரகங்கள் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, மருத்துவமனைகளில் உள்ள காலி படுக்கைகள் குறித்த விவரங்கள் தொடர்ந்து பதிவேற்றப்படும்
- மாநில தலைநகரில், மாநகராட்சி, பொதுப்பணித்துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் படுக்கை வசதிகளை மேம்படுத்திட ஏற்பாடுகள் செய்துதரப்படும்
- இவை அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கும் ஒருங்கிணைந்த கட்டளை மையம், ‘கோட் ரெட்’ எனும் வரையறையை வகுத்து வைத்திருக்கும். அதன்படி, கரோனாவால் பாதிக்கப்பட்டு அவசர சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு மருத்துவமனை சேர்க்கையில் முன்னுரிமை வழங்கப்படும்
- எங்கு எவ்வளவு பிராணவாயு இருக்கிறது என்பதனை இம்மையம் தரவுகளைக் கொண்டு துல்லியமாக கணித்து வைத்திருக்கும்
- அனைத்து அவசர அழைப்பு எண்களும் இதன் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு பயனாளிகளுக்கு தகவல் துரிதமாக வழங்கப்படும். அதன்படி, 104, 108, 102 ஆகிய இலவச அழைப்பு எண்கள் 24 மணிநேரமும் செயல்பாட்டில் இருக்கும். கூடுதலாக 044 - 29510400, 044 - 29510500, 044 - 24300300, 044 - 46274446 ஆகிய தொலைபேசி எண்களையும், 9444340496, 8754448477 ஆகிய கைபேசி எண்களையும் தொடர்பு கொண்டு தகவல்களை பெற்றுக் கொள்ளலாம்.
- இதுமட்டுமில்லாமல், கரோனா தொற்றினால் சிகிச்சை பெற்று வருபவர்கள், சிகிச்சை எடுக்க செல்பவர்கள் அரசின் காப்பீடு திட்டம் குறித்து அறிந்துகொள்ளவும் இந்த மையம் உதவிடும்
- அனைத்து துறைகளும் நேரடியாக இந்த கட்டளை மையத்துடன் இணைக்கப்பட்டுள்ளதால், அனைத்து மக்களுக்கும் தங்கு தடையின்றி சேவை கிடைக்கும்
ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் கீழ் இயங்கும் குழுக்கள் எவை எவை?
- சமூகவலைதள கண்காணிப்புக் குழு - @104_GoTN சமூக வலைதளங்களின் வாயிலாக வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும்
- பதில் மற்றும் நிலை கணிப்புக் குழு - தீவிரமாக சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து கண்காணிக்கப்படும்
- தனியார் மருத்துவமனைகளின் படுக்கை மேலாண்மை - தனியார் மருத்துவமனையில் படுக்கை இருப்பு, பிராணவாயு இருப்பு குறித்து கணக்கிடல்
- மருத்துவ கல்வி இயக்குநரகத்தின் படுக்கை மேலாண்மை குழு - அரசு மருத்துவமனையில் படுக்கை இருப்பு, பிராணவாயு இருப்பு குறித்து கணக்கிடல்
- முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வராத மருத்துவமனைகள்- இங்கு அனுமதிக்கப்படும் கரோனா தொற்று நோயாளிகளை கண்காணிக்கும் குழு
- செயல்பாடுகளில் உத்தரவாதம் - அனைத்து விதமான சேவைகளும் பயனாளர்களுக்கு சீராக கிடைக்கிறதா என்பதை தன்னார்வலர்களைக் கொண்ட குழு கண்காணிக்கும்
- கள ஆய்வுக் குழு - அனைத்து மருத்துவமனைகளிலும் அம்மாவட்ட அலுவலர்கள் கொண்டு கள ஆய்வு மேற்கொள்ளப்படும்.
- பொது சுகாதார கள ஆய்வுக் குழு - கட்டுப்படுத்தப்பட்ட இடங்களில் கரோனா நோயாளிகளுக்கான சேவை குறைபாடுகளை களைய இந்த குழு உதவியாக இருக்கும்
ஒருங்கிணைந்த கட்டளை மையத்தின் ஆதரவு குழு
- 108 - அனைத்து அவசர ஊர்திகளிலும் தங்காட்டி கருவி பொருத்தப்பட்டு (ஜிபிஎஸ்) கண்காணிக்கப்படும்
- மருந்து கட்டுப்பாடு குழு - மருந்து இருப்பு நிலை கண்காணிக்கப்படும்
- தரவு பகுப்பாய்வு குழு - கிடைக்கப்பெறும் தகவல்களின் உண்மைத்துவம் கண்காணிக்கப்படும்