நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 20) தேர்தல் பரப்புரையை தொடங்கினார். இதற்கு அனுமதி மறுத்த காவல்துறையினர், உதயநிதி ஸ்டாலினை கைது செய்தனர். காவல்துறையினரின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சியில் திமுகவினர் போராட்டம்:
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே மாநகர செயலாளர் அன்பழகன் தலைமையில் திமுகவினர் ஏராளமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது, உதயநிதி கைது செய்யப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பினர்.
திருப்பத்தூரில் சாலை மறியல்:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஆம்பூர் சட்டப்பேரவை உறுப்பினர் வில்வநாதன் தலைமையிலான திமுகவினர், அதிமுக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
புதுக்கோட்டையில் திமுக போராட்டம்:
புதுக்கோட்டை சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ண அரசு தலைமையில் 100க்கும் மேற்பட்ட திமுகவினர், புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தருமபுரியில் திமுகவினர் மறியல்:
பென்னாகரம் சட்டப்பேரவை உறுப்பினர் பிஎன்பி இன்பசேகரன், பென்னாகரம் பேருந்து நிலையம் முன்பு மறியலில் ஈடுபட்டார். அவருடன் 50க்கும் மேற்பட்ட திமுகவினர் பங்கேற்று அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து சம்பவ இடம் விரைந்த காவல்துறையினர், மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
திண்டுக்கல்லில் சாலை மறியல்:
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் - வத்தலகுண்டு பிரதான சாலையான மூஞ்சிக்கல் பகுதியில் திமுக நகர செயலாளர் முகமது இப்ராஹிம் தலைமையிலான திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அரை மணி நேரத்துக்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்:
திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர், அவிநாசி - கோவை நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூரில் திமுகவினர் கைது:
கோவை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தமிழ்மணி ஆகியோர் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதையடுத்து, 200க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல்துறையினர் கைது செய்தனர்.
கன்னியாகுமரியில் திமுக ஆர்ப்பாட்டம்:
திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் முன் மாவட்ட செயலாளர் சுரேஷ்ராஜன் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மறியலில் ஈடுபட்டனர்.