எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விரும்பி, திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று, அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளேன். இத்தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என கட்சி நிர்வாகிகள் விரும்பினர். மேலும், இங்கு எளிதில் வெற்றி பெறலாம் என அவர்கள் கூறியதால் விண்ணப்பித்துள்ளேன்.
தமிழகம் முழுவதும் மக்களிடையே நல்ல எழுச்சி ஏற்பட்டுள்ளது. ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராக உள்ளனர். எனவே கண்டிப்பாக திமுக ஆட்சி அமைக்கும். அரசியலில் மக்களை சந்திக்க வேண்டும். அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே கலைஞரை ஏற்றுக்கொண்டதால் என்னையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றில்லை. எனவே, அவருடன் என்னை ஒப்பிட வேண்டாம். கலைஞர் என்பவர் ஒருவர்தான். படிப்படியாக நான் வளர்ந்து வருகிறேன். தற்போது ஒரு வாய்ப்பு கேட்டுள்ளேன். அதைத் தலைவர், பொதுச்செயலாளர் பார்த்து முடிவு செய்வார்கள்” என்று கூறினார்.
தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா மாட்டாரா என்று பல்வேறு யூகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. இந்நிலையில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதி விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதால், அவர் தேர்தலில் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: திமுகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்போம், அமமுக கூட்டணி விரைவில் அறிவிக்கப்படும்- டிடிவி தினகரன்