சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதவி ரத்து செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு முழு அதிகாரமும் கொடுத்து அரசாணை வெளியிடப்பட்டது தொடர்பாக அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
அதில், "பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதவி இடத்தை ரத்து செய்து, அவருக்கான அதிகாரங்களை பள்ளிக்கல்வி ஆணையரிடம் ஒப்படைப்பது என்ற தமிழ்நாடு அரசின் முடிவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி குரல்கள் எழுந்திருக்கின்றன.
அரசு நிர்வாகத்தில் காலத்திற்கு ஏற்ப சீர்திருத்தங்களைச் செய்வது அவசியம் என்றாலும், அவற்றை 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று செய்வது சரியாக இருக்காது. துறை சார்ந்தவர்களிடம் முறையாக கலந்தாலோசித்து அதற்கேற்ப முடிவுகளை எடுக்க வேண்டும்.
அத்தகைய முடிவுகளை எடுத்து செயல்படுத்தும் போது, முன்பு இருந்ததைவிட நிர்வாகப் பணிகள் சிறப்பாக அமைய வேண்டுமே தவிர, அத்துறையில் இருப்பவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடாது. எனவே, இப்பிரச்னையில் தமிழ்நாடு அரசு நிதானமாக செயல்பட்டு உரிய முடிவினை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என வலியுறுத்தியுள்ளார்.