சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி, தற்பொழுது ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த மூன்று நாட்களாக கிடுகிடுவென தக்காளியின் விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழை காரணமாக தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. திடீரென உயர்ந்துள்ள தக்காளியின் விலை குறித்து நம்மிடையே பேசிய கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டின் தலைவர் சௌந்தரராஜன், "கடந்த சில நாட்களாக கர்நாடகா, ஆந்திரா பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் மூலம் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளியின் விலை கிடுகிடு என உயர்ந்துள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் வழக்கமாக 60 லாரிகளில் தக்காளி வந்துகொண்டு இருந்த நிலையில் தற்பொழுது 40 லாரிகளில் வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக தக்காளியின் விலை 100ஐ தாண்டியது போல, தற்பொழுது உயர வாய்ப்பில்லை. இன்னும் ஒரு வாரத்தில் இந்த விலை உயர்வானது கட்டுக்குள் வரும் என எதிர்பார்க்கிறோம். பசுமைப் பண்ணை கடைகளில் தக்காளி விலை குறைத்து விற்பனை செய்யப்படும் என்று அரசு அறிவித்திருப்பது என்பது கண்துடைப்பு போன்றே பார்க்கிறோம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓணம் பண்டிகை சிறப்பு பூ சந்தை - 600 டன்களுக்கு மேல் பூ விற்பனை