டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் முக்கியக் குற்றவாளிகளாகத் தேடப்பட்டுவந்தார் காவலர் சித்தாண்டி. தலைமறைவாக இருந்துவந்த சித்தாண்டியை ராமநாதபுரம் - சிவகங்கை சாலையில் வைத்து காவல் துறையினர் நேற்று கைதுசெய்தனர்
இதைத்தொடர்ந்து அவரது கூட்டாளியாகச் செயல்பட்ட காவலர் பூபதியும் தற்போது சிக்கியுள்ளார். அவரிடம் சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த வழக்கில் மற்றொரு முக்கியக் குற்றவாளியான முகப்பேர் ஜெயக்குமார் தலைமறைவாகியுள்ளார். அவரைத் தனிப்படை காவல் துறையினர் ஆந்திராவில் தேடி வருகின்றனர்.
சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி தலைமையகத்தில் குரூப்-2ஏ தேர்வு மோசடி தொடர்பாக இடைத்தரகர்கள் சிலரிடம் இன்று விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் முறைகேடு நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து முறைகேடில் ஈடுபட்ட 99 தேர்வர்கள் அரசு பணி தேர்வெழுத வாழ்நாள் தடை விதிக்கப்பட்டது. அத்துடன் தேர்வு முறைகேட்டுக்கு துணைபுரிந்து டிஎன்பிஎஸ்சி ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த விவகாரத்தில் மூளையாகச் செயல்பட்டதாக காவலர் சித்தாண்டி, இடைத்தரகர் ஜெயக்குமார் ஆகியோர் மீது சிபிசிஐடியினர் பல்வேறு பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து தேடி வந்தனர். தற்போது முக்கியக் குற்றவாளியான காவலர் சித்தாண்டி கைது செய்யப்பட்டிருப்பதால் வழக்கு குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.