இந்தியா - சீனா ராணுவத்திற்கு இடையே எல்லைப் பகுதியான லடாக்கில் நேற்றிரவு (ஜூன் 15) மோதல் ஏற்பட்டது. கால்வான் பகுதியில் நடைபெற்ற இந்த மோதலில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த பழனி உள்பட மூன்று இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். இந்திய ராணுவத்திற்கு பழனி 22 ஆண்டுகளாக சேவையாற்றி வந்தார்.
இந்நிலையில், நாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியா - சீனா எல்லையான லடாக் பகுதியில், இருநாட்டு ராணுவத்திற்கும் இடையே நடந்த மோதலில், இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.
இந்த மோதலில், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை வட்டம் கடுக்கலூர் கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் கே. பழனி என்பவர் இன்று உயிரிழந்தார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மனவேதனை அளித்தது. இரவு பகல் பாராது, தன்னலம் கருதாமல், தியாக உணர்வோடு இந்தியாவை பாதுகாக்கும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு, வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கும், பிற ராணுவ வீரர்களின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டிற்காக தனது இன்னுயிரை தியாகம் செய்த ராணுவ வீரர் பழனியின் குடும்பத்திற்கு ரூ. 20 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். வீர மரணமடைந்த வீரரின் குடும்பத்திலிருந்து ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும்" என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும், வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பழனியின் வீரமும் தியாகமும் அனைவர் மனதிலும் துதிக்கப்படும்' - தமிழிசை