சென்னை: தமிழ்நாட்டில் சித்த மருத்துவப்பல்கலைக்கழகம் அமைப்பதற்கு நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவின் மீது ஆளுநர் மாளிகை கேட்டுள்ளவற்றிற்கு விளக்கம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்; புதிதாக 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரிகள் அமைக்கவேண்டுமென ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவை சந்தித்து வலியுறுத்த உள்ளதாகவும் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று (செப்.2) ரேடியோ கதிர் இயக்கவியல் துறை நுண்கதிர் இயக்க மையமாக தரம் உயர்த்தப்பட்டதைத்தொடர்ந்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரியில் ஒருங்கிணைப்பு மையத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
கதிர்வீச்சு துறை - நுண்கதிர் மையம்: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் பட்ஜெட் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதைபோல், மருத்துவக்கல்லூரிகளுக்கு வரும் நோயாளிகள் சிகிச்சைப் பெறுவதை ஒருங்கிணைப்பதற்கான மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகள் தங்களின் குறைகளைத் தெரிவிக்க புகார் எண்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியில் உள்ள கதிர்வீச்சுத் துறை நுண்கதிர் மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னை மருத்துவக்கல்லூரியிலும், கீழ்ப்பாக்கம் மருத்துவக்கல்லூரியிலும் மட்டும் ரேடியாலாஜித்துறை மையம் உள்ளன. இதன்மூலம், தலை முதல் பாதம் வரையில் உள்ள நோய்களை அடையாளம் கண்டறிந்து சிகிச்சையளிக்க முடியும். 17 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சையை அளிக்க ரேடியாலாஜித்துறை பயனுள்ளதாக இருக்கிறது.
ரூ.178 கோடியில் புதிய கட்டடம்: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையின் கட்டமைப்பை உயர்த்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. அதற்கானப்பணிகள் ரூ.178 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டும்பணிகள் நடந்து வருகின்றன. ஏப்ரல் மாதம் மக்கள் பயன்பாட்டிற்குக்கொண்டு வரப்படும். கடந்தாண்டு 11 புதிய மருத்துவக்கல்லூரிகளில் 1450 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைக்கப்பெற்றன.
6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள்: நடப்பாண்டில் கூடுதலாக 50 இடங்களையும் சேர்த்து 1500 இடங்களில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். மாவட்டத்திற்கு ஒரு மருத்துவக்கல்லூரி வீதம் தென்காசி, மயிலாடுதுறை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உட்பட 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லூரி அமைப்பது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மண்டவியாவை 6ஆம் தேதி சந்தித்து வலியுறுத்த உள்ளோம். மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணிகளை விரைப்படுத்தவும், செவிலியர் கல்லூரிகளை தொடங்கவும் அனுமதி கேட்க உள்ளோம்.
சித்த மருத்துவப் பல்கலைக்கழகம்: தமிழ்நாட்டில் சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைக்கப்பட உள்ளதால், அதற்காக சித்தா மற்றும் ஹோமியோபதி துறை அமைச்சரையும் சந்தித்து வலியுறுத்த உள்ளோம். பருவநிலை மாற்றத்தால் குழந்தைகள் உடல் நலம் பாதித்துள்ளது. அனைத்து மாவட்டத் தலைமை மருத்துவமனைகளில், மருத்துவக்கல்லூரியில் இதற்காக ஏற்கெனவே குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் தமிழ்நாடு முழுவதும் தயார் நிலையில் இருக்கிறது.
விரைவில் தமிழ்நாடு ஆளுநருக்குப் பதில்: சித்த மருத்துவப் பல்கலைக்கழகம் அமைப்பதற்கு தமிழ்நாடு அரசால் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகை விளக்கம் கேட்டுள்ளது. அதற்கான விளக்கம் தயார் செய்யப்பட்டு, தலைமைச்செயலாளரிடம் உள்ளது. அந்த விளக்கங்களை முதலமைச்சரின் அனுமதிப்பெற்று தமிழ்நாடு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்.
சித்த மருத்துவக்கல்லூரி மற்றும் பல்கலைக்கழகம் அமைக்க 25 ஏக்கர் பரப்பளவில் மாதவரம் பால்பண்ணை அருகே கட்டடம் கட்டத்தேவையான இடம் மருத்துவத்துறைக்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறிஞர் அண்ணா சித்த மருத்துவக்கல்லூரியில் நிர்வாக அலுவலகம் அமைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் சித்த மருத்துவக்கல்லூரி அங்கு விரைவில் நிறுவப்படும். தமிழ்நாட்டில் தற்போதய நிலையில் கரோனோ முதல் தவணை தடுப்பூசியை 96% பேரும் இரண்டாம் தவனை 90% பேரும் செலுத்தினர்.
இதேபோல் பூஸ்டர் தடுப்பூசிகளை 15% பேர் மட்டுமே செலுத்தி உள்ளனர். பூஸ்டர் தடுப்பூசியைப் பொறுத்தமட்டில் இந்த மாதம் இறுதி வரை இலவசமாக போடப்படுகிறது. இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டத்திற்கு குறுகிய காலம் மட்டுமே உள்ளதால் 2 வாரங்களுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வந்த மெகா தடுப்பூசி முகாம் இனி வார இறுதியில் நடத்தப்படும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உடற்கல்விக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறதா...? போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இருக்கிறதா...?