சென்னை: ஒவ்வொரு ஆண்டும் ஆங்கிலேயர்களிடம் இருந்து நமது இந்திய நாடு சுதந்திரம் பெற்ற நாளான ஆக.15 ஆம் நாள் நாடெங்கும் விமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அன்றைய தினம் நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழுள்ள முப்படைகளின் அணிவகுப்பும் வண்ணமையமாக தலைநகர் டெல்லியிலுள்ள செங்கோட்டையில் நடத்தப்படும். தவிர நாடெங்கும் உள்ள அரசு அலுவலகங்கள், அரசு துறை நிறுவனங்கள், நாட்டின் விடுதலைப் போர் நினைவிடங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நாட்டின் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செய்யப்படும். அதன்படி, இந்தியாவின் 75 வது சுதந்திர தினவிழா வரும் ஆக.15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில் சுதந்திர தினத்தையொட்டி, சமூக ஊடகங்களில் ஆக.2 ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை அனைவரும் தேசிய கொடியை முகப்புப் படமாக வைக்கவேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை வைத்திருந்தார். தனது முகப்புப் பக்கத்தையும் நாட்டின் தேசியக் கொடியாக அவர் மாற்றினார். இதேபோல், ஆக.13 முதல் 15ஆம் தேதி வரையில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடியேற்றும்படி பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். தேசியக் கொடிக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தபால் நிலையங்கள் மூலம் தேசிய கொடி விற்பனையும் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்களிடையே நாட்டுப்பற்றை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. அக்கடிதத்தில், '2022 ஆகஸ்டு 13 முதல் 15 வரை தமிழகத்திலுள்ள "அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி" ஏற்றி தேசப்பற்றை வெளிப்படுத்தவும், 75வது சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பிக்கவேண்டும்.
அனைத்து மாணவர்களுக்கும் இதனை தெரிவித்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள, அனைத்து வகைப் பள்ளித்தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளுப்படுகின்றனர்' எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ராணுவ பெண் அதிகாரியின் நெகிழ்ச்சி தருணம்... 27 ஆண்டுகளுக்கு முன்பு தாய் பயிற்சி பெற்ற அதே அகாடமியில் பயிற்சி பெற்ற மகன்...