ஆளுநர் உரை மீதான பதிலுரையில் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர், அரசுமுறைப் பயணமாக வெளிநாடுகளுக்கு சென்றதன் மூலம் லண்டனில் புகழ்வாய்ந்த கிங்ஸ் மருத்துவமனையின் கிளை, தமிழகத்தில் விரைவில் அமைக்கப்பட இருப்பதாகத் தெரிவித்தார். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு பிறகு 19 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 63 புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் 83 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியிருப்பதாகக் கூறிய அவர், சென்னையை அடுத்த வண்டலூரில் உள்ள அண்ணா உயிரியல் பூங்கா மேம்படுத்தப்பட்டு, சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்படும் என தெரிவித்தார். தமிழகம் முழுவதும் உள்ள நகர, ஊரகப் பகுதிகளில் இல்லந்தோறும் இணையம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும் எனவும், முதியோர் ஒய்வூதியம் மேலும் 3 லட்சம் பேருக்கு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்தார்.
ஆளுநர் உரையில் தற்பெருமை எதுவும் இல்லை எனவும், அரசின் கொள்கைகள், திட்டங்கள் மட்டுமே இடம்பெற்றிருப்பதாக தெரிவித்த முதலமைச்சர், அதிமுகவை எதிர்க்கட்சிகள் குறைத்து மதிப்பிட்டதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசால் விருது மழை பொழிந்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார். இறுதியாக ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு அவையில் இருக்கும் அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளையும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: 2019 - 2020ஆம் ஆண்டிற்கு கூடுதல் நிதியாக 6,580 கோடி ஒதுக்கீடு - நிதி அமைச்சர்