சென்னை: கலைவாணர் அரங்கத்தில் பாமக சார்பில் அக்கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜி.கே மணி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பட்ஜெட் குறித்து பேசிய அவர், "மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, காவிரி-கோதாவரி இணைப்புத் திட்டத்திற்கு மத்திய அரசை வலியுறுத்துதல், தர்மபுரி, விழுப்புரம் போன்ற பல மாவட்டங்களில் விரைந்து சிப்காட் தொடங்கப்படும் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
கல்விக் கடன் தள்ளுபடி, விவசாய கடன்களில் மேலும் தள்ளுபடி, நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை குறைப்பு போன்றவற்றை மக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் பட்ஜெட்டில் பெட்ரோல் வரி குறைப்பு குறித்த அறிவிப்பு மட்டுமே இடம் பெற்றுள்ளது.
நல்ல அம்சங்களை உள்ளடக்கிய நிதிநிலை அறிக்கை வரவேற்கக்கூடியதாக இருந்தாலும், மக்கள் எதிர்பார்த்தவைகள் பெரிதாக இல்லை" என்று அவர் தெரிவித்தார்.