சென்னை (Accident): சென்னை மாங்காடு அடுத்த கொழுமணிவாக்கத்தைச் சேர்ந்தவர் சங்கர்(60), எலக்ட்ரீசயனாக வேலை செய்து வந்தார். இவரது மகன் மகேஷ்(33), இவரது நண்பர் சின்னராஜ்(28), சாஃப்ட்வேர் இன்ஜினியர்.
இவர்கள் 3 பேரும் சபரிமலைக்கு மாலை அணிந்து இருந்தனர். சில தினங்களுக்கு முன்பு சபரிமலைக்குச் சென்று சாமி தரிசனம் செய்து விட்டு, இன்று அதிகாலை 3 பேரும் காரில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
மகேஷ் காரை ஓட்டி வந்துள்ளார். சின்னராஜை அவர் தங்கியிருக்கும் இடத்தில் இறக்கிவிட்டு, இவர்கள் வீட்டுக்கு செல்வதற்காக சென்று கொண்டிருந்தனர்.
நின்ற லாரியின் மீது கார் மோதியது
அதிகாலை 3 மணி அளவில் மவுண்ட் - பூந்தமல்லி சாலையில் வந்த போது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி மீது கார் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் 3 பேரும் பலத்த காயமடைந்தனர். கார் மோதிய வேகத்தில் சங்கர் மற்றும் சின்னராஜ் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
பலத்த காயமடைந்த மகேஷ் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவரும் உயிரிழந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சங்கர் மற்றும் சின்னராஜ் இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் - வருமான வரம்பை உயர்த்தி அரசாணை