இது குறித்து பள்ளிக்கல்வித்ததுறை செயலாளர் பிரதீப் யாதவ் வெளியிட்டுள்ள அரசாணையில், ஆசிரியர் சமுதாயத்தின் நலனுக்கான வெளிப்படையான கலந்தாய்வு பொது மாறுதல் நடைமுறைகள் தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்ற அரசின் முடிவிற்கு ஏற்ப பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டின்கீழ் பணியாற்றும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் 2019-20ஆம் கல்வியாண்டில் பொது மாறுதல் வழங்க நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது.
அதன்படி தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒன்றியத்திற்குள், நகராட்சிக்குள், மாநகராட்சிக்குள் முதலில் மாறுதல் வழங்க பரிசீலிக்க வேண்டும். வருவாய் மாவட்டத்திற்குள் ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் வழங்கலாம். அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளியை பொறுத்தவரையில் வருவாய் மாவட்டத்திற்குள், மாவட்டம் விட்டு மாவட்டம் வழங்கலாம்.
ஆசிரியர்களுக்கு பணி நிரவல், ஆசிரியர்கள் மாறுதல்கள், அதனையொட்டி பதவி உயர்வு என்ற முறையில் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். நிர்வாகக் காரணங்களின் அடிப்படையில் தகுதிவாய்ந்த அலுவலர்களால் ஆசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் ஆணை எந்த நேரத்திலும் வழங்கப்படலாம். இந்தாண்டுக்கான பொதுக்கலந்தாய்வு கல்வித்தகவல் மேலாண்மை இணையதளம் மூலம் நடைபெறுவதால் ஆசிரியர்கள் மாறுதல் பெறும்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படுகிறது. இதனால், ஆசிரியர்களின் சுய விபரம் உடனுக்குடன் மேம்படுத்துதல் செய்யப்படுவதால், அனைத்து பொது மாறுதல் பணிகளும் ஒளிவு மறைவின்றி செய்யப்படும் என அதில் கூறியுள்ளார்.
மேலும் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், இன்று 21ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனவும், ஆன்லைன் வழியில், ஜூலை 8ஆம் தேதி முதல், 15ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளார்.