சென்னை: நந்தனம் அறிவியல், கலை கல்லூரியில், மாணவர்கள், பேராசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமை உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், "கரோனா தொற்றை குறைப்பதற்கு அனைத்து நடவடிக்கையும் அரசு எடுக்கப்பட்டு வருகிறது.
மாநில எல்லைகளில் தீவிர சோதனை
பிற மாநிலங்களில் கரோனா அதிகரித்து வருவதையும் கண்காணித்து வருகிறோம். மாநில எல்லையில் சோதனைகள் தீவிரப்படுத்தபட்டுள்ளன. தொற்று எண்ணிக்கை ஏற்றத் தாழ்வு உள்ள 13 மாவட்டங்களையும் கண்காணித்து வருகிறோம்.
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் 3,06,74,681 நபர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் கல்லூரி பள்ளிகள் திறக்கப்படுவதால், மக்கள் அதிகம் கூடும் பகுதிகள், நிகழ்வுகள் உள்ளிட்ட இடங்களை தொடர்ந்து கண்காணித்து ரத்த மாதிரிகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெனோம் ஆய்வகம்
கரோனா மரபியல் மாற்றங்களை ஆய்வுசெய்து கண்டறிய ஜெனோம் ஆய்வகம் சென்னையில் அமைக்கப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக அடுத்த மூன்று தினங்களில் ஆய்வகம் செயல்படவுள்ளது.
தற்போது கரோனா பாதிக்கப்பட்டால் என்ன மாதிரியான மரபணு என்பதை கண்டறிவதற்காக, பரிசோதனை மாதிரிகளை பெங்களூரு, ஹைதராபாத் போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைக்கிறோம். அப்படி அனுப்பி வைக்கப்பட்ட 2,693 முடிவுகள் தற்போது வந்துள்ளன. அதில் 2,150 டெல்டா வகை என முடிவு வந்துள்ளது. 12 டெல்டா பிளஸ் என தெரியவந்துள்ளது.
ஆர்டிபிசிஆர் கட்டாயம்
தமிழ்நாட்டில் டெல்டா வகை கரோனாவால் 80 விழுக்காடு பேர் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் தடுப்பூசிகள் இருப்பு வைக்காமல் போடப்பட்டு வருகிறது. கூடுதலான தடுப்பூசி ஒதுக்கினால் மட்டுமே தேசிய சராசரிக்கு இணையான அளவில் தடுப்பூசி செலுத்த முடியும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். அவர்களும் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளனர்.
கல்லூரி முதலாண்டு பயிலும் மாணவர்களில் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கு ஒன்றிய அரசு அனுமதி அளித்தால் தொடர்ந்து அவர்களுக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்படும். கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வரும் அனைத்து மாணவர்களுக்கும் ஆர்டிபிசிஆர் பரிசோதனை கட்டாயம்" என தெரிவித்தார்.