சென்னை:இந்தியாவில் சுதந்திரத்திற்கு பின் மொழிவாரியாக மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. அதற்கான போராட்டங்கள் நாடு முழுவதும் வலுக்க ஆரம்பித்த நிலையில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று இந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரித்து அறிவித்தது. இதனையடுத்து தமிழ் பேசும் மாநிலத்திற்கு சென்னை மாகாணம் எனப்பெயரிடப்பட்டது.
அதன் பின்னர் தமிழ் பேசும் மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயரிட வேண்டும் என சங்கரலிங்கானார் 76 நாட்கள் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு வந்த அண்ணாத்துரை தலைமையிலான திமுக அரசு 1968 ஆம் ஆண்டு ஜூலை 18 அனடு தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது.
முன்னதாக மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்ட நவம்பர் 1 ஆம் தேதியை கர்நாடகா மற்றும் சில மாநிலங்கள் அதன் அரசு விழாவாக கொண்டாடி வந்தது. இருப்பினும் தமிழ்நாட்டில் இது போன்ற விழாக்கள் கொண்டாடப்படவில்லை. இது தொடர்பாக பல தமிழ் அமைப்புகள் மற்றும் பல தலைவர்கள் தமிழ்நாடு நாள் கொண்டாடப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த தொடர் கோரிக்கையைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 25 அன்று விழா கொண்டாட அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணை படி 2019 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு விழா கொண்டாடப்பட்டது. மேலும் 2021 ஆம் ஆண்டு தமிழ்நாட்டிற்கு ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இந்த நாளை மாற்றி ஜூலை 18 அன்று தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என அறிவித்தது.
இந்த அறிவிப்பிற்கு எதிர்கட்சிகளின் தலைவர்களான எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் ராமதாஸ் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர் தொல் திருமாவளவனும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நவம்பர் 1 ஆம் தேதியை கொண்டாடப்போவதாக தெரிவித்தார். இருப்பினும் இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு நாள் தமிழ்நாடு அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் சார்பில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
இதையும் படிங்க:அரசு விழாவில் மத சடங்குகளா? - விரட்டியடித்த தர்மபுரி எம்பி!