சிவகங்கை மாவட்டம் கீழடியில் 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்ட அகழாய்வுப் பணிகளில் முதல் மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளை இந்திய தொல்லியல் துறை மேற்கொண்டது.
நான்கு, ஐந்தாம் கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொண்டது. நான்காம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருள்கள் பற்றிய ஆய்வறிக்கையை தமிழ்நாடு தொல்லியல் துறை வெளியிட்டது. இதன்மூலம் வைகைக்கரையின் நகர நாகரிகம் இரண்டாயிரத்து 500 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது.
அதன்பின்னர் கீழடி அகழாய்வுப் பகுதிகளை விரிவுபடுத்தி பணிகளைத் தொடர்ந்து நடத்திடவும், தமிழர்களின் முழுமையான வரலாற்றை வெளிக்கொணரவும் கோரிக்கைகள் எழுந்தன. கீழடியில் பன்னாட்டுத் தரத்தில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்க நிதிநிலை அறிக்கையில் 12.21 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்காக அரசுப்பள்ளி விளையாட்டு மைதானம் அருகே இரண்டு ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. கீழடியில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகளை இன்று தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி மூலம், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த அகழாய்வுப் பணி கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது.
இதையும் படிங்க: 'அம்மா உணவகம் எங்கும் மூடப்படவில்லை' - முதலமைச்சர் உறுதி