சென்னை: மறைந்த பிர்சா முண்டாவின் பிறந்தநாள் நேற்று (நவம்பர் 15) கொண்டாடப்பட்டது. இந்த நாள், பழங்குடியின மக்களை கௌரவிக்கும் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிர்சா முண்டா அருங்காட்சியகத்தை, காணொலி காட்சி வாயிலாக நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
அப்போது பகவான் பிர்சா முண்டா பிறந்தநாளை, 'பழங்குடியினர் பெருமை நாள்' என நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நிலையில் பிரதமர் மோடியின் இந்த அறிவிப்புக்கு ஆர்.என். ரவி நன்றி தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை அறிவிப்பு
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்திய விடுதலைப் போராட்டத்தில் பழங்குடியின மக்களின் பங்கு அளப்பரியது. அவர்கள் நாடு முழுவதும் தத்தம் பகுதிகளில் ஆங்கிலேயர்களை முழு வலிமையுடன் எதிர்த்துப் போராடினர்.
மேலும், அத்தகைய போராட்டங்களின்போது அவர்களில் எண்ணற்றோர் பெரும் துயரங்களை அடைந்ததுடன், ஆங்கிலேயர் கைகளால் மாண்டும்போயினர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாபெரும் தலைவராக பகவான் பிர்சா முண்டா விளங்கினார்.
அவர் துணிவுமிக்கவராகவும், மக்கள் போற்றும் தலைவராகவும் திகழ்ந்தார். தன் இளம் வயதிலேயே ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு வீரமரணம் அடைந்தார். பகவான் பிர்சா முண்டா நம் நாட்டு விடுதலைக்காக, வீரத்துடன் போரிட்டு, அளப்பரிய பங்காற்றியதைப் போற்றும் வகையில், அவரது பிறந்த நாளான நவம்பர் 15ஆம் தேதியை 'பழங்குடியினர் பெருமை நாள்' என அறிவித்த நரேந்திர மோடிக்கு ஆர்.என். ரவி நன்றி தெரிவித்தார்.
இந்நன்னாளில், ஆர்.என். ரவி பொதுவாக இந்தியப் பழங்குடியின மக்களுக்கும், குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த பழங்குடியின மக்களுக்கும் அவர்கள் செய்த எண்ணற்ற தியாகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த இந்திய மறுமலர்ச்சியில் பழங்குடியின மக்களும் ஏனையோருக்கு இணையான பங்குதாரர்களே என்பதை மெய்ப்பிக்கும் வகையில், பழங்குடியின மக்களின் அனைத்து வகையிலுமான வளர்ச்சிக்காக, நரேந்திர மோடி பூண்டுள்ள உறுதிமொழியை அவர் மீண்டும் வலியுறுத்திக் கூறினார்" என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கடவுளாக திகழ்கிறார் பிர்சா முண்டா - பிரதமர் மோடி புகழாரம்