ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த பாராஞ்சி கிராமத்தில் பொங்கல் பண்டிகையொட்டி திரௌபதி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் திருவிழாவை முன்னிட்டு சோளிங்கர் காவல் நிலைய ஆய்வாளர் பாரதி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திருவிழாவில் ஒரு பெண் அடங்கிய நான்கு பேர் கொண்ட கும்பலுடன் சந்தேகப்படும்படியாக அங்கிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதன்பேரில், போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து பிடிக்கும்போது, அந்த கும்பலில் 4 பேர் சிக்கிய நிலையில், பெண் மட்டும் தப்பித்து ஓடிவிட்டார். விசாரணையில், தப்பியோடிய பெண்ணின் பெயர் தமிழ் செல்வி என்பது தெரிந்தது.
மேலும், போலீசார் அவர்கள் வைத்திருந்த காரை சோதனை செய்தபோது, காரில் பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதை கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.
இதையும் படிங்க: முதுமலை யானை பொங்கல்; சுற்றுலா பயணிகளுடன் கொண்டாடிய அதிகாரிகள்..!
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்டவர்கள், பாராஞ்சி அண்ணா நகர் சுதன் (27), செல்வமந்தை மேல் களத்தூர் ஞானபிரகாஷ் (25), சோளிங்கர் விக்கி (24), பாராஞ்சி கிராமம் விஜய் (24) ஆகியோர் என தெரிய வந்தது.
மேலும், இவர்கள் ஒரு குழுவாக சேர்ந்து திருவிழா நேரத்தில் தனியாக செல்லும் நபர்களிடம் கொள்ளை அடிக்க திட்டம் தீட்டியது விசாரணையில் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நான்கு பேரையும் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடியா தமிழ் செல்வியை தேடி வருகின்றனர்.
பொங்கல் பண்டிகை நேரத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட காத்திருந்த கும்பலை போலீசார் துரிதமாக மடக்கி பிடித்து கைது செய்ததால், அப்பகுதியில் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.