நீலகிரி: முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதிகாரிகள், சுற்றுலா பயணிகளுடன் பழங்குடியினர்களின் பாரம்பரிய இசைக்கு நடனமாடி மகிழ்ந்தனர்.
ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில் யானை பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இன்று யானைகள் வளர்ப்பு முகாமில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டியது. இதில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபா சங்கர், நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
யானைகள் முகாம் வளாகத்தில் புதுபானையில் அதிகாரிகள் அனைவரும் தனித்தனியாக தங்கள் குடும்பங்களுடன் பொங்கல் வைத்தனர். பின்பு உறியடியில் கட்டப்பட்ட மண்பானையை கண்களை கட்டியபடி அதிகாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் உடைத்தனர்.
அதனை தொடர்ந்து குரும்பர் பழங்குடியினர் அவர்களது பாரம்பரிய இசைக்கு நடனமாடிய பொழுது, முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கிருபா சங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.எஸ். நிஷா, முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் வித்யா, சுற்றுலா பயணிகள், பள்ளி மாணவிகள் ஆகியோர் அவர்களுடன் நடனமாடி மகிழ்ந்தனர்.
இதையும் படிங்க: காணும் பொங்கல்: திருச்சி முக்கொம்புவில் குவிந்த மக்கள்!
பின்பு உணவு மாடத்தில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த யானைகளுக்கு பொங்கல் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. குறிப்பாக கரும்பு, தர்பூசணி, அன்னாசி, மாதுளை ஆப்பிள், உள்ளிட்ட பழ வகைகளும், ஊட்டச்சத்து உணவு மற்றும் வெண் பொங்கல் வழங்கப்பட்டது.
மேலும், இந்த விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது. தெப்பக்காடு யானைகள் முகாமில் நடைபெற்ற இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை காண தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.
இந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தில் ஆஸ்கர் விருது பெற்ற 'எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' குறும்படத்தில் இடம்பெற்ற ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகளுக்கு பாகன்கள் உணவு வழங்குவதை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தும், புகைப்படங்களை எடுத்தும் மகிழ்ந்தனர்.