இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை நிலவரம்
தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும் (ஜூன் 26), நாளையும்(ஜூன் 27) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 28ஆம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஜூன் 29, 30ஆகிய தேதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று முதல் ஜூன்.28 ஆம் தேதி வரை குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, தென் தமிழ்நாடு கடலோரப் பகுதிகள் மற்றும் தென்மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்தக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: 35ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை!