சென்னை: நகர்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப். 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில், பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வரும் பிப்ரவரி 22ஆம் தேதியன்று 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகள் (தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் முதல்நிலை பேரூராட்சி தவிர ) என 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22இல் 268 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதுகுறித்த தகவல் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும், சென்னையை பொறுத்தவரை 15 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு சென்னையில் உள்ள லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட 15 இடங்களில் வாக்கு எண்ணும் பெட்டிகள் வைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
வாக்காளர் துணைப் பட்டியல் வெளியீடு
தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வார்டு வாரியான, பிரதான மற்றும் வாக்காளர் துணைப்பட்டியல்களை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணைய இணையதளமான https://tnsec.tn.nic.in-இல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வசதியை பயன்படுத்தி வாக்காளர்கள் தங்களின் பெயர், எந்த வார்டு மற்றும் எந்த வாக்குச்சாவடியில் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.
மேலும், ’உங்கள் வாக்குச்சாவடியை அறிந்து கொள்ளுங்கள்' (Know your Polling Station) என்ற வசதியை பயன்படுத்தி, வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்தும் மேற்படி விவரங்களை அறிந்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளதால் வாக்காளர்கள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவும்.
17ஆம் தேதியுடன் பிரச்சாரம் நிறைவு
நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை தற்போது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், நாளை மறுதினம் (பிப். 17) தேர்தல் பரப்புரை முடிவடையவுள்ளது. மேலும், பிப். 17ஆம் தேதி மாலை 5 மணியுடன் தேர்தல் பரப்புரை முடித்துக் கொள்ளப்பட வேண்டும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: 'யாரை மிரட்டுகிறீர்கள் பழனிசாமி? கற்பனையில்கூட அப்படி ஒரு கனவு காணாதீர்கள்!'