சென்னை: தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் இன்று (ஆக.23) நடந்த 'காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு'-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசினார்.
7ஆவது முதலீட்டாளர் மாநாடு: அப்போது பேசிய அவர், 'திமுக ஆட்சியேற்று ஓராண்டு காலம் முடிவுற்ற நிலையில், இந்தத் துறையால் நடத்தக்கூடிய இந்த 7ஆவது முதலீட்டாளர் மாநாடு எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. சென்னை, கோயம்புத்தூர், தூத்துக்குடி, துபாய் என்று பல இடங்களில் இம்மாநாடு நடந்தபோதிலும் இத்தனை மாநாடுகள், இவ்வளவு குறுகிய காலத்தில் வேறெந்த மாநிலத்திலும் நடந்திருக்க வாய்ப்பு இல்லை எனக் கருதுகிறேன்.
தமிழ்நாட்டிற்கு 3ஆவது இடம்: ஏராளமான முதலீடுகள் ஈர்க்கப்படுவதும்; புதிய தொழில்கள் தொடங்கப்படுவதும்; தமிழ்நாட்டை ஏராளமான நிறுவனங்கள் நோக்கி வருவதும் தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடைபெறுகிறது என்பதற்கு அடையாளமாக விளங்குகிறது. மேலும், தொழில் நிறுவனங்கள் தொடங்குவதை எளிதாக்கும் மாநிலங்களின் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு தமிழ்நாடு முன்னேறி வந்திருக்கிறது.
புதிய திட்டங்களின் நோக்கம் வேலைவாய்ப்புகளே: சில நாட்களுக்கு முன்னால், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் ஒரு கருத்தைச் சொல்லி இருந்தார். 'வளர்ச்சித் திட்டங்கள் என்பவை, வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய வளர்ச்சித் திட்டங்களாக அமைய வேண்டும்' என்று சொல்லி இருந்தார். தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரைக்கும், எந்தத் திட்டமிடுதலாக இருந்தாலும் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகத்தான், அது அமையும். அமைய வேண்டும் என்று நான் அலுவலர்களுக்கு உத்தரவிட்டிருக்கிறேன்.
அதிகரிக்கும் தனிநபர் வருமானம்: அனைத்துத்துறைகளிலும் கவனம் செலுத்தி இவ்வாறான துறைகளில் முதலீடுகளை ஈர்த்திடுவதன் மூலம், அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். இதன் மூலம், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை வலிமையுற செய்வதோடு, மாநிலத்தின் உற்பத்திச்சூழலையும் மேம்படுத்த முடியும். அதிக அளவில் வேலைவாய்ப்பு அளிக்கும் தொழிற்சாலைகள், பின்தங்கிய மாவட்டங்களில் அமைக்கப்படுவதன் மூலம், அப்பகுதி மக்களின் தனிநபர் வருமானம் அதிகரிப்பதுடன், அந்தப் பகுதியின் பொருளாதாரமும் வளர்ச்சி அடைகின்றது.
ஊக்குவிக்கும் சிறப்புத்திட்டம்: தமிழ்நாடு தொழில் கொள்கை 2021-ன் கீழ் வழங்கப்படும் நிலையான ஊக்கச் சலுகைகளுடன், கூடுதலாக தொழில்நுட்ப ஜவுளிகள் மற்றும் ஆடைகள் உற்பத்தியை ஊக்குவிக்கும் சிறப்புத் திட்டம் ஒன்றும் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது. தோல் அல்லாத காலணிகள் துறைமீது கவனம் செலுத்திடவும் நமது அரசு முனைந்து வருகிறது. தோல் அல்லாத காலணிகள்தான் அடுத்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சி வாய்ப்புகளை வழங்கிடும். குறிப்பிட்டுக்கூற வேண்டுமானால், தோல் அல்லாத உற்பத்திப்பொருட்கள்தான் சந்தையில் 70 விழுக்காட்டுக்கும் அதிக அளவில் விற்கப்படுகின்றன.
25ஆயிரம் வேலைவாய்ப்புகள்: ரூ.1000 கோடி முதலீடு மற்றும் 25 ஆயிரம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில் தைவான் நாட்டைச் சேர்ந்த Hong Fu நிறுவனம், தனது உற்பத்தித் திட்டத்தினை நிறுவிட தமிழ்நாட்டினைத் தேர்ந்தெடுத்துள்ளது. உலகப்புகழ்பெற்ற தோல் அல்லாத காலணி நிறுவனங்களான Nike, Adidas, Reebok, Puma போன்ற நிறுவனங்கள், நேரடியாக தமிழ்நாட்டில் உற்பத்தி நிறுவனங்களை நிறுவவில்லை. மாறாக, ஒப்பந்த உற்பத்தியாளர்கள் மூலமே உற்பத்தியை மேற்கொண்டு வருகின்றன' எனக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: மத்திய அரசில் சுருக்கெழுத்தாளர் சி மற்றும் டி நிலைத் தேர்வு