தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு மாவட்ட நிர்வாகங்களுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளைச் செய்துவருகிறது. தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் தற்போதுவரை நீட்டிக்கப்பட்டு, அமலில் உள்ளது.
இதற்கிடையில், கரோனா பணிகளை மேற்கொள்ள மக்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தங்களாலான நிதியுதவிகளை தமிழ்நாடு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் நேற்று , வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் ( TAFCORN ) சார்பில் கரோனா நிவாரணப் பணிக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் தலைமைச் செயலர் சண்முகம், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா, முதன்மைத் தலைமை வனப் பாதுகாவலர், வனத்துறை தலைவர் பி. துரைராசு, தமிழ்நாடு வனத்தோட்டக் கழகத்தின் தலைவர் சையது முஜம்மில் அப்பாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.