சென்னை: சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம், 2017-18ம் ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்த போதும், குறித்த காலத்துக்குள் வருமான வரியை வட்டியுடன் செலுத்தவில்லை எனக் கூறி, அந்த நிறுவனத்துக்கு எதிராகவும், அதன் இயக்குநர்களுக்கு எதிராகவும் வருமான வரித்துறை எழும்பூர் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தது.
ஆனால், வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் முன்பே வட்டியுடன் சேர்த்து வருமான வரியாக, 6 லட்சத்து 85 ஆயிரத்து 462 ரூபாயை செலுத்திவிட்டதாக கூறி, தங்களுக்கு எதிரான புகாரை ரத்து செய்யக் கோரி, தனியார் நிறுவனமும், அதன் இயக்குநர்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், வழக்கு தொடர்பான ஆவணங்களில் இருந்து மனுதாரர், வரியை வட்டியுடன் செலுத்தியுள்ளதால், வேண்டுமென்றே வரி ஏய்ப்பு செய்யும் உள்நோக்கம் மனுதாரருக்கு இல்லை என தெரிவித்து, மனுதாரர் நிறுவனத்தின் மீதான புகாரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
வரி ஏய்ப்பு செய்வதாக இருந்தால் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்திருக்கமாட்டார்கள், வரித்துறை நோட்டீஸ் அனுப்பும் வரை காத்திருக்காமல் வட்டியுடன் வருமான வரியை செலுத்தியிருக்க மாட்டார்கள் எனத் தெரிவித்த நீதிபதி, நான்கரை மாத தாமதத்தை தவிர வரி ஏய்ப்பு செய்ய முயற்சித்ததற்கு எந்த ஆதாரங்களும் இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். உண்மை தகவல்களை மறைத்து அலட்சியமாக, வழக்குத் தொடர்ந்த வருமான வரித்துறையின் செயல்பாடு, அதிகார துஷ்பிரயோகம் எனவும் நீதிபதி கண்டனம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தங்க காயின் தருவதாக கூறி சுமார் :ரூ.30 லட்சம் - காயின் பிளஸ் நிறுவனம் மீது புகார்