சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் செயல்பட்டு வரும் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் காவல்துறை விசாரணை பிரிவு ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பிரிவின் டிஜிபியாக சுனில் குமாரை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனடிப்படையில் நேற்று மாலை (ஜூலை 2) மாநில மனித உரிமை ஆணையத்தின் காவல்துறை விசாரணை பிரிவு டிஜிபியாக அவர் பொறுப்பேற்று கொண்டார்.
இவரை ஆணையத்தின் டி.எஸ்பிக்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதைத்தொடர்ந்து பேசிய அவர், “சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்ய உள்ளோம். அதன் பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
டிஜிபி சுனில்குமார் ஏற்கெனவே பல்வேறு துறைகளில் பணியாற்றிய அனுபவம் பெற்றவராக உள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த இவர், எம்.ஏ சட்டம் படித்து 1988 ஆம் ஆண்டு அலுவலராக காவல்துறை பணிக்கு சேர்ந்தார்.
பின்னர் போக்குவரத்து காவல்துறை, ஆவின் ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை, சீருடை பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றினார். மேலும், டெல்லியில் மத்திய உளவு துறையில் பணிப்புரிந்தும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜம்மு காஷ்மீர், என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை