அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்குப் புகார் கடிதங்கள் வந்தன. அதனடிப்படையில் சுமார் 280 கோடி ரூபாய் முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை செய்வதற்காக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் விசாரணை அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பொதிகை வளாகத்தில் அவருடைய அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அலுவலகத்தில் நீதிமன்ற வளாக அறையும் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து புகார் அளித்தவர்கள், முறைகேட்டில் தொடர்புடையவர்களைத் தேவைப்படும்போது நீதிமன்றத்தை போல் விசாரிக்கவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் மீதான விசாரணை அலுவலர் கூறும்போது, "அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என அதன் பதிவாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
ஆனால் அவர் ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. எனவே அவரை நேரில் முன்னிலையாகும்படி விசாரணைக்குழு அழைப்பாணை அனுப்பியுள்ளது. அதனடிப்படையில் அவர் விரைவில் ஆவணங்களை விசாரணை அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளதாகக் கூறியுள்ளார். அந்த ஆவணங்களின் அடிப்படையில் அடுத்தகட்ட விசாரணை நடைபெறும்" எனத் தெரிவித்தனர்.