திமுக முன்னாள் சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.டி.சீதாபதியின் உருவ படத்தை திமுக தலைவர் ஸ்டாலின் சென்னையில் உள்ள பெரியார் திடலில் திறந்து வைத்து அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதில் திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி, எம்.எல்.ஏக்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பொன்முடி, சேகர் பாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியின் இறுதியில் ஆர்.டி.சீதாபதிக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
பின்னர் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ”இன்று நான் திமுக தலைவராக இருக்கலாம், ஆனால் முதல் முதலில் திமுகவில் ஒரு பகுதி, மாவட்ட பிரதிநிதியாகவும் வரவேண்டும் என்று சீதாபதி என்னை கட்டாயப்படுத்தி அழைத்தவர். இதனால் கருணாநிதியிடம் பல முறை திட்டு வாங்கியிருக்கிறார்.
"ஏன்பா என் பையன் நல்லா இருக்கிறது பிடிக்கவில்லையா?, நான் படுர கஷ்டம் போதாதா" என்று உரிமையுடன் கருணாநிதி அவருடன் சண்டை போடுவார். அதற்கு அவரோ, "நான் யாரையும் வீணாக கட்சிக்கு அழைக்கவில்லை, உழைப்பவரை அழைக்கிறேன்" என்று பதில் கூறுவார். நான் இன்று இந்த நிலைமைக்கு வந்திருக்க காரணமானவர்களில் ஆர்.டி.சீதாபதி ஒருவர்" என்று கூறினார்.