சென்னை: மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நாடு முழுவதுமுள்ள உயர் கல்வித் துறை அமைச்சர்கள், உயர் அலுவலர்களுடன் துறைகளின் செயல்பாடுகள் குறித்து காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் அறிவியல் தொழில்நுட்ப மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கண்டுபிடிப்புகளின் பயன்களை மக்களிடம் கொண்டுசெல்வதற்கேற்ப தொழில்நுட்ப கண்காட்சி, விளக்க மையங்களை ஏற்படுத்தவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் செயலர் சீனிவாசன், “உயர் கல்வி நிறுவனம் ஒவ்வொன்றிலும் கண்டுபிடிப்பு மையங்கள் ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளோம். அதேபோல் கண்டுபிடிப்புகளின் பயன்கள், அது தொடர்பான தகவல்களை அடித்தட்டு மக்களுக்கு கொண்டுசெல்ல மாவட்டம்தோறும் தொழில்நுட்ப கண்காட்சி, விளக்க மையங்களை ஏற்படுத்த வேண்டும்.
ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கு கண்டுபிடிப்புகள் குறித்து அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டுவருகின்றன. தமிழ்நாட்டில் புதிதாக ஒரு அறிவியல் தொழில்நுட்ப மையம் அமைப்பதால், மேலும் கண்டுபிடிப்புகளை அதிகரிக்க முடியும்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் மூலம் அறிவுசார் குறியீடுகளைப் பெற்றுத் தருகிறோம். ஊட்டி பூண்டுக்குப் புவிசார் குறியீடு பெற்றுத் தருவதன் மூலம் அதன் விலை உயர்ந்துள்ளது. மேலும் அந்தப் பூண்டில் புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி உள்ளது.
அதேபோல் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி கருப்பட்டிக்குப் புவிசார் குறியீடு பெற பெரும் முயற்சிகள் நடைபெற்றுவருகின்றன" எனத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன், உயர் கல்வித் துறை முதன்மைச் செயலர் அபூர்வா, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தின் உறுப்பினர் செயலர் சீனிவாசன் ஆகியோர் காணொலி காட்சி வாயிலாகக் கலந்துகொண்டனர்.