இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அறம் பிறழ்கின்ற போது, நான் இவ்வுலகில் அவதரிப்பேன்” என்றுரைத்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்த தினமான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருநாளை கொண்டாடும் மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
"கண்ணன் பிறந்தான்- எங்கள் கண்ணன் பிறந்தான்
இந்தக் காற்றதையெட்டுத் திசையிலுங் கூறிடும்
திண்ணமுடையான், மணி வண்ணமுடையான்
உயர் தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன்"
என்று மகாகவி பாரதியார் தெய்வக் குழந்தையாம் கண்ணனின் பிறப்பை போற்றி பாடி உள்ளார்.
இந்தத் திருநாளன்று மக்கள் தங்கள் இல்லங்களில் ஸ்ரீகிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த வெண்ணெய், தயிர், பழங்கள், பலகாரங்களை படைத்து குழந்தைகளின் பிஞ்சு காலடிகளை மாவில் நனைத்து, இல்லம் நெடுக பதித்து குழந்தை ஸ்ரீகிருஷ்ணனே தங்கள் இல்லத்திற்கு வந்ததாக பாவித்து மகிழ்ச்சியுடன் இறைவனை வழிபடுவார்கள்.
ஒப்பற்ற ஞான நூலான பகவத் கீதையை உலகிற்கு அருளிய பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த இத்திருநாளில், அதன் போதனைகளான அன்பு செலுத்துதல், பலன் கருதாது கடமையை செய்தல், பற்றற்று இருத்தல், எளிமையாக வாழ்தல் உள்ளிட்டவையை மக்கள் அனைவரும் வாழ்வில் பின்பற்றி மகிழ்வுடன் வாழ்ந்திட வேண்டும். அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மனமார்ந்த ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி நல்வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "மும்மொழி கொள்கைக்கு அனுமதி இல்லை"- தமிழ்நாடு அரசு திட்டவட்டம்