சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி சென்னை, செங்கல்பட்டு காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் பருவ மழை சிறப்பு அலுவலராக அமுதாவை அரசு நியமித்துள்ளது. இன்று செங்கல்பட்டு மாவட்டம் ஆதனூரில் தொடங்கும் அடையாறு ஆற்றின் நீரோட்டத்தை அமுதா நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு பெய்த மழையின் காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டு முடிச்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.
தற்போதும் 2015ஆம் ஆண்டைப் போலவே அதிக அளவு மழை பெய்து வருவதால், அமுதா அடையாறு ஆற்றை சுற்றியுள்ள முடிச்சூர், அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எவ்வளவு மழைநீர் தேங்கி உள்ளது.
அடையார் ஆறு எவ்வாறு தூர்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. முடிச்சூர், வரதராஜபுரம் பகுதிகளில் செய்யப்பட்டுள்ள மழைநீர் வடிகால் கால்வாய் பணிகள் எவ்வாறு செய்யப்பட்டுள்ளது என்பதை குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " மழை நீர் செல்லும் கால்வாய்களில் எந்தெந்த இடத்தில் அடைப்புகள் உள்ளது என்பதை கண்டறிந்து அந்த இடங்களில் தூர்வாரப்பட்டு வருகிறது. தூர்வாரும் பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அடையார் ஆற்றங்கரை முடிச்சூர் பகுதியில் உள்ள நீர்நிலைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு வருகிறது. மழைநீர் வடிகால் கால்வாய்கள் முறையாக அமைத்துள்ளதால் கடந்த வெள்ள பெருக்கு போல் தற்போது எங்கும் மழை நீர் தேங்கவில்லை என்றார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு முடிச்சூர் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது அமுதா சிறப்பு அலுவலராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மீண்டும் தமிழ்நாடு பணிக்கு திரும்புகிறார் அமுதா ஐஏஎஸ்..