தொடக்க கல்வித் துறை இயக்குநர் பழனிச்சாமி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி, தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள், நர்சரி தொடக்கப் பள்ளிகளுக்கு கடந்த 24ஆம் தேதி முதல் ஜனவரி இரண்டாம் தேதிவரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் பருவ தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாள்கள் மாணவர்கள் தங்கள் பெற்றோர், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏதுவாக அமைய வேண்டும்.
மேலும் இந்த விடுமுறை நாள்கள் மாணவர்கள் தங்கள் நண்பர்களுடன் விளையாடி புத்துணர்ச்சி பெறுவதாக அமைய வேண்டும். ஆனால் சில தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் இந்த விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவதாகக் கவனத்திற்கு வந்துள்ளது.
எனவே அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாள்களில் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக் கூடாது என அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்க வேண்டும்.
மேலும் இதனை மீறி ஏதேனும் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடைபெறுவது கண்டறியப்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் இது குறித்து மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து கல்வி அலுவலர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுரை வழங்கி விட்டு, அதன் விவரத்தை தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.