சென்னை: மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும், சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும், இன்று விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணி தமிழக முழுவதும் நடைபெறுகிறது.
இந்நிகழ்ச்சியில் திராவிட கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி,
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, CPM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், CPI மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் காதல் மொய்தீன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் ஆகிய கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
பேரணியின் போது ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு எதிராகவும், பாஜகவுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. பேரணியின் போது பல கட்சித் தலைவர்கள் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
முதலில் பேசிய ம.தி.மு.க தலைவர் வைகோ,"தொல் திருமா அவர்களின் இந்த மனிதச் சங்கிலி போராட்டம், சென்னை மாநகரம் கண்டிடாத ஒரு புரட்சிகரமான அணிவகுப்பு ஆகும். இலட்சக்கணக்கான பேர் கலந்து கொண்டு, சீன சுவர் போல் நின்று, வீர முழக்கங்களை எழுப்பி வருகிறார்கள். இதுதான் வெற்றி. இந்த வெற்றி தொடரட்டும் சனாதன சக்திகள் ஓடட்டும்.
இது தந்தை பெரியாரின் மண், இது அம்பேத்கரின் மண், இது பேரறிஞர் அண்ணாவின் மண். இப்போராட்டத்தின் வெற்றி உங்கள் அனைவரையும் சேரும். தொடர்ந்து இது போன்ற போராட்டங்களை முன்னெடுப்போம்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன்,"இந்த அறப்போர் ஒரு நீண்ட நெடிய கருத்தியல் போருக்கான தொடக்க நிலை. சங்பரிவாரின் கும்பலின் சதி அரசியலை முறியடிப்பதற்கான ஒரு ஒத்திகை. இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு அளவிற்கு ஏறத்தாழ ஒரு 80 அமைப்புகள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றிருக்கிறது.
இந்திய வரலாற்றில் இவ்வளவு இயக்கங்கள் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்கள் எதுவும் இல்லை. இந்த மண்ணில் சாதிய வாதத்திற்கும், மதவாதத்திற்கும் இடம் கிடையாது. சாதியின் பெயரால், மதியின் பெயரால் மக்களைக் கூறு போடும் இயக்கத்திற்கு இங்கு இடம் கிடையாது. தமிழ்நாடு முழுவதும் ஒன்றியம், பேரூர், கிளை என அனைத்து இடங்களிலும் மக்கள் திரண்டு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
சனாதன கும்பலுக்கு இறுதியாக எச்சரிக்கை விடுக்கிறோம். மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று திட்டம் போடக்கூடாது. அப்படி நினைத்தால் நீங்கள் வந்த வழியே திரும்பிப் போய்விடுங்கள் என்று எச்சரிக்கை விடுகிறோம். இந்த அறப்போரில் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆர்எஸ்எஸ் என்பது ஒரு சராசரி இயக்கம் கிடையாது. ஆர்எஸ்எஸ் என்பது ஒரு பாசிசம் உள்ள பயங்கரவாதம் முகம் உள்ள ஒரு இயக்கம். காந்தியைக் கொன்ற பயங்கரவாத இயக்கம், காமராஜரைக் கொல்ல முயன்ற பயங்கரவாத இயக்கம்.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் இயக்கத்திற்கு அனுமதி இல்லை. ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்குத் தமிழ்நாடு அரசு அனுமதி கொடுக்கக் கூடாது. நவம்பர் 6ஆம் தேதி நடைபெறும் ஆர் எஸ் எஸ் அணிவகுப்பைத் தடுப்பதற்கு சட்டரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கொலை வழக்குகளை விசாரிப்பதற்கு காவல்துறையில் தனிப்பிரிவு - நீதிபதிகள் கோரிக்கை