சென்னையில் நாளுக்கு நாள் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக ராயபுரம், தண்டையார்பேட்டை, திரு.வி.க நகர், கோடம்பாக்கம் மண்டலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.
இந்நிலையில், கோடம்பாக்கம் மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் கரோனா பரவல் காரணம் குறித்து மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதில், அப்பகுதிகளில் மக்கள் கூட்டம் கூட்டமாக கடைகளுக்கு செல்வதும், குறிப்பாக மேற்கு மாம்பலம் பகுதியில் உள்ள ஆரிய கவுடர் சாலைகளில் உள்ள கடைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, ஆரிய கவுடர் சாலைகளில் உள்ள சுமார் 50 கடைகளை மூட மாநகராட்சி அலுவலர்கள் காவல்துறைக்கு உத்தரவிட்டனர். அதனடிப்படையில் இன்று அசோக் நகர் காவல் நிலைய துணை ஆணையர் தலைமையில், ஆரிய கவுடர் சாலை கடைகளை காவல்துறையினர் மூடினர். தொடர்ந்து ஆரிய கவுடர் சாலையும் தடுப்புகள் அமைத்து முழுவதுமாக மூடப்பட்டது.
இது தொடர்பாக மாநகராட்சி அலுவலரிடம் கேட்ட போது, கோடம்பாக்கம் மண்டலத்தில் கரோனா பரவலின் தாக்கம் அதிகரித்து வருவதால் அந்த பகுதியில் அதிகம் மக்கள் கூடும் இடமான, ஆரிய கவுடர் சாலையையும், அதில் உள்ள கடைகளையும் 10 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்றார். மேலும், இந்த உத்தரவை மீறும் வணிகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சங்கர் நகர் காவல் நிலையத்தில் அதிகரிக்கும் கரோனா: காவலர்கள் அச்சம்