சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த 36 வயதான பெண்ணுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. அதே பகுதியில் வசிக்கும் தனது பள்ளித் தோழியை பார்க்க அவர் சென்றிருந்தபோது குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்த அத்தோழியின் கணவர் மகேஷ்குமார் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாசமாக படம் எடுத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், படத்தை வைத்து அப்பெண்ணிடம் இருந்து சுமார் 100 சவரன் நகை மற்றும் ஏராளமான பணத்தை மிரட்டி பெற்றுக் கொண்டதாகவும், அதனை திருப்பி கேட்ட போது தன்னையும் தனது கணவர் மற்றும் குழந்தைகளையும் கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும், பாதிக்கப்பட்ட பெண் சார்பில் கடந்த ஜூலை மாதம் வண்ணாரப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தவிர பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அடியாட்களை கூட்டி வந்து மிரட்டியதாகவும், அப்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாகவும் ராயபுரம் காவல் நிலையத்தில் மகேஷ்குமார் மீது இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதில், ஏற்கனவே ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு பிணை பெற்று விட்ட நிலையில் மீதமுள்ள இரண்டு வழக்குகளில் பிணை வழங்கக்கோரி மகேஷ்குமார் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், மகேஷ்குமாருக்கு பிணை வழங்கக்கூடாது என உத்தரவிடக்கோரி புகார்தாரரான பாதிக்கப்பட்ட பெண் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், மகேஷ் குமாருக்கு பிணை வழங்கினால் மீண்டும் வந்து தனக்கு தொல்லை கொடுப்பார் எனவும், ஆதாரங்களை அழித்து விடுவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் வழக்கு விசாரணையை செப்டம்பர் 9 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.