சென்னை: உலகளவிலுள்ள 2 விழுக்காடு ஆராய்ச்சியாளர்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து 7 பேராசிரியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
மேலும் அண்ணா பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமூகத்திற்கு பயனுள்ளதாக இருப்பதால் அதனை அதிகளவில் பிற ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்தியுள்ளனர். இது போன்ற ஆராய்ச்சியால் அண்ணா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர்கள் உலகளவில் ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் இடம் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.
அறிவியல் ஆராய்ச்சியாளர்களின் தரமான கண்டுபிடிப்புகளை 22 அறிவியல் துறையில், 176 தலைப்புகளில் வெளியிடப்பட்ட கட்டுரைகளின் பயன்பாட்டின் அடிப்படையிலும், ஒருவர் 5 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலும், ஒரு லட்சம் ஆராய்ச்சியாளர்கள் 2 விழுக்காட்டிற்கும் மேல் உள்ளனர் என அமெரிக்காவில் உள்ள ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் ( Stanford University) அறிவித்துள்ளது.
இது குறித்து அண்ணாப் பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் சுகந்தி கூறும்போது, 'ஸ்டான்போர்ட் பல்கலைக் கழகம் உலகில் உள்ள ஆராய்ச்சிகளை பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து தரமான ஆராய்ச்சிகளைத் தேர்வு செய்துள்ளனர். உலகளவில் மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சிகளில் 2 விழுக்காடு ஆராய்ச்சிகளைத் தேர்வு செய்துள்ளனர்.
சிறந்த ஆராய்ச்சியாளர் பட்டியலில் பேராசிரியர்கள்
உலகளவிலான ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்ட ஆராய்ச்சியாளர்களில் இருந்து அண்ணா பல்கலைக் கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் 3 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இது எங்களுக்குப் பெருமையாக இருக்கிறது. துணைவேந்தர் வேல்ராஜ், பேராசிரியர் நாகராஜ் மற்றும் நான் இடம் பெற்றுள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் செய்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை ஆய்வு செய்து, அதன் தரம் நன்றாக இருக்கிறது என அறிவித்துள்ளனர்.
மேலும் ஒவ்வொரு ஆண்டிற்கும் சிறந்த ஆராய்ச்சியை மேற்கொண்டவர்கள் யார் என்பது குறித்து மேற்கொள்ளப்பட்டு தரவரிசைப்படுத்தி உள்ளனர். அதில் அண்ணா பல்கலைக் கழகத்தின் வளாக கல்லூரிகளில் இருந்து 7 ஆசிரியர்களும், அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்பு கல்லூரி உள்ளிட்டவற்றில் இருந்து 6 ஆசிரியர்களும் இடம் பெற்றுள்ளனர்.
உலகளவில் ஆராய்ச்சிகளை செய்து அளித்துள்ளோம் என்பது எங்களுக்கும் மேலும் ஊக்கத்தை அளிக்கிறது. உலகளவில் பிற ஆராய்ச்சியாளர்களுடன் தரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறோம் என்பது பெருமையாகயும், ஊக்கத்தை அளிப்பதாகவும் அமைந்துள்ளது.
மக்களுக்கு தேவையான நல்ல ஆராய்ச்சி
ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியிட்டால் அதனை எத்தனைபேர் எடுத்து பயன்படுத்துகின்றனர் என்பதையும், தரத்தையும், புதிய ஆய்வுகள் செய்து எத்தனை ஆராய்ச்சிகள் கொண்டு வர முடியும் உள்ளிட்டப் பல்வேறு காரணங்களின்படி தரவரிசை செய்கின்றனர். அதன் அடிப்படையில் உலகளவில் ஆராய்ச்சியாளர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.
உலகளவில் ஆராய்ச்சி செய்து வெளியிடப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் ஆய்வு செய்துள்ளனர். அவற்றில் இருந்து தொடர்ந்து சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளாக இருக்கும் 1 லட்சத்து 86 பேர் 2 விழுக்காட்டில் இருக்கின்றனர். ஒரு ஆண்டில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 64 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் தங்களின் ஆய்வுகளை மேலும் தரப்படுத்த வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழத்தில் மக்களுக்குத் தேவையான நல்ல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்பொழுது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில், எரிசக்தி, நீர், எலக்ட்ரிக்கல் வாகனம், ஒருங்கிணைந்த வளர்ச்சி ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொள்ளலாம். சமூகமும், சுற்றுச்சூழலும் பாதிக்காத வகையில் தரமான ஆராய்ச்சிகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டு வருகிறோம்.
மின்சாரத்தை சேமித்து வைக்க ஆராய்ச்சி
கடல் சார் மேலாண்மை, நீர்மேலாண்மை, எரிசக்தி மேலாண்மை, புதுப்பிக்கத்தக்க எரி சக்தி சூரிய மின்சாரம், காற்று மின்சாரம் போன்ற மீண்டும் மீண்டும் கிடைக்கும் சக்தியைக் கொண்டு பயன்படுத்துவது போன்ற ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.
மின்சாரம் தயாரிக்க நிலக்கரி பயன்படுத்துகிறோம். பயன்படுத்திய பின்னர் மீண்டும் அதனை கொண்டு வர முடியாது. தொழில் வளர்ச்சியால் மறந்த சிலவற்றை மீண்டும் இயற்கையுடன் இணைந்து கொண்டு வருகிறோம். இயற்கைச் சூழலுக்கு உகந்ததாகவும், மாசு ஏற்படாத வகையிலும் எரிசக்தியாக மீண்டும் பெறுகிறோம்.
அண்ணா பல்கலைக் கழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறோம்.
சூரிய சக்தி கொண்டு மின்சாரம் உற்பத்தி செய்து, அதனை எந்த இடத்தில் எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து தான் ஆராய்ச்சி செய்துள்ளோம்.
ஒரு சில இடங்களில் நிலக்கரி மூலம் தயார் செய்யப்படும் மின்சாரத்தை தான் பயன்படுத்த முடியும். பிற இடங்களில் சூரிய மின்சாரத்தை பயன்படுத்தலாம். மின்சாரத்தை சேமிப்பதற்கு மக்கள் அதிகளவில் பயன்பாட்டினை தொடங்கியுள்ளனர்.
அரசும் சூரிய சக்தி மின்சாரத்தை ஊக்குவித்து வருகிறது. அரசும் சூரிய எரி சக்தி கொள்கைகளை வகுத்து, மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி , பயன்பாட்டையும் அதிகரித்துள்ளது. சூரிய எரிசக்தி மின்சாரம், காற்று மின்சாரம் ஆகியவற்றை சேமித்து வைப்பதற்கான ஆராய்ச்சியும் நடைபெற்று வருகிறது. இந்த ஆராய்ச்சியும் வணிகப் பயன்பாட்டிற்கு வரும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு செக் - விரைவில் புதிய விதிமுறைகள்