சென்னை: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில், நபார்டு கடனுதவியுடன் 38 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் 14 தடுப்பணைகள் கட்டுவது தொடர்பாக கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இதனையடுத்து அரசின் தடுப்பணை பட்டியலில் உள்ள, ஈரோடு மாவட்டம், கொடுமுடி தாலுகா, கொம்பனைபுதூரில் குரங்கன்பாளையம் ஓடையில் தடுப்பணை கட்டத்தடை விதிக்கக்கோரி, கொளத்துபாளையம் கிராமத்தைச்சேர்ந்த தங்கவேலு என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், "தடுப்பணை கட்ட உத்தேசித்துள்ள பகுதியை ஆய்வு செய்த தொழில்நுட்பக்குழு, இந்த இடம் தடுப்பணை கட்ட உகந்ததல்ல எனத் தெரிவித்துள்ளதாகவும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் இந்தப்பகுதியில் தடுப்பணை கட்டினால், அப்பகுதியில் உள்ள கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொளத்துபாளையத்தில் தடுப்பணையை மாற்றி அமைக்கும்பட்சத்தில் அங்கு நிலத்தடி நீர் உயர வாய்ப்புள்ளதாகவும், இதுசம்பந்தமாக அரசுக்கு மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளார். இதனால் தடுப்பணையை கொளத்துபாளையத்தில் கட்ட உத்தரவிட வேண்டும்" என கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் தமிழ்ச்செல்வி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், 4 வாரங்களில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: 800 அரசு மருத்துவர்களை பணிவரன்முறை செய்க - மு.க. ஸ்டாலினுக்கு கோரிக்கை