சென்னை: அம்பத்தூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர் தற்கொலை செய்து உயிரிழந்த வழக்கில் மாணவரை காதலித்து ஏமாற்றியதாக ஆசிரியையை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.
பன்னிரண்டாம் வகுப்பு முடித்துவிட்டு கல்லூரியில் சேர காத்திருந்த மாணவர் கலந்தாய்விற்குச் சென்று திரும்பியுள்ளார். அப்போது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைக்கண்ட பெற்றோர் அவரை மீட்டு அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ஆனால் செல்லும் வழியிலேயே மாணவன் உயிரிழந்தார். மாணவனின் மரணத்தில் சந்தேகம் அடைந்த பெற்றோர் காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அம்பத்தூர் காவல்துறையினர் மாணவனின் உடலை கைப்பற்றி உடற்கூராய்விற்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் மாணவனின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கினர். இதில் மாணவனின் மொபைல் போனை கைப்பற்றி மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன. அதன்படி, மாணவன் தனியார் பள்ளியில் பயின்றபோது அதே பள்ளியில் பணியாற்றி வந்த பகுதி நேர ஆசிரியையான ஷர்மிளா என்பவருக்கும் மாணவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அதோடு அந்த ஆசிரியை நடத்தி வந்த ட்யூஷனிலும் இவர் சேர்ந்து படித்துள்ளார். நாளடைவில் இவர்கள் இருவரது பழக்கம் காதலாக மாறி, இருவரும் காதலித்து வந்துள்ளனர். ஒரு கட்டதில் ஆசிரியை ஷர்மிளா வீட்டில் அவருக்கு திருமண நிச்சயம் நடைபெற்றுவிட்டதால், அந்த ஆசிரியை மாணவனுடனான தொடர்பை முழுவதுமாக துண்டித்துள்ளார்.
இருப்பினும் மாணவன் பல முறை ஆசிரியையிடம் தன்னிடம் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் ஆசிரியை பேசவில்லை. இதனால் மனமுடைந்த மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்ததை அடுத்து, அம்பத்தூர் காவல்துறையினர் ஆசிரியை ஷர்மிளாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பள்ளியில் பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியருடனான பழக்கத்தால் மாணவன் வழிமாறி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்த சம்பவத்தில் ஆசிரியை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நண்பனின் நினைவு நாளில் கெத்து காட்ட பொதுமக்களை கத்தியால் வெட்டி வன்முறையில் ஈடுபட்ட ரவுடிகள்