சென்னை: ஏர்டெல் நிறுவன போஸ்ட்பெய்டு செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்த சென்னை மேற்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஜெ.யேசுதயன் என்பவரின் செல்போன் சேவை, கோரிக்கை வைக்காமலேயே 2012ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது குறித்து, புகார் அளித்துள்ளார். அப்போது, போலியான குறுஞ்செய்தி என கூறிய ஏர்டெல், புதிய சிம்கார்டு பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
அந்த எண் முடக்கப்பட்ட நேரத்தில் சென்னை தேனாம்பேட்டை ஐசிஐசிஐ வங்கியில் உள்ள அவரது கணக்கிலிருந்து 4 லட்சத்து 89 ஆயிரம், அவருக்கே தொடர்பில்லாத நான்கு கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. பணம் கொள்ளை அடிக்கப்பட்டது குறித்து ஐசிஐசிஐ வங்கி மற்றும் காவல் துறையிடம் புகார் அளித்த நிலையில், சேவை குறைபாடு குறித்து ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றிற்கு எதிராக சென்னை நுகர்வோர் குறைதீர் ஆணையத்திலும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் ஆர்.வி.ஆர்.தீனதயாளன், உறுப்பினர் டி.வினோத்குமார் ஆகியோர் சேவை குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை உறுதி செய்வதாக குறிப்பட்டுள்ளனர். அதன் அடிப்படையில், மனுதாரர் இழந்த தொகை 4 லட்சத்து 89 ஆயிரம் ரூபாயை 9 சதவீத வட்டியுடன், மன உளைச்சலுக்கான இழப்பீடாக 2 லட்சம் ரூபாயையும், வழக்கு செலவுத்தொகையாக 10 ஆயிரம் ரூபாயையும் மூன்று மாதங்களுக்குள் வழங்க வேண்டும் என ஐசிஐசிஐ மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 7 லட்சம் பேர் விண்ணப்பம்