சென்னை: தஞ்சாவூர் மாவட்டம், திருமலை சமுத்திரம் கிராமத்தில் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் மற்றும் அதன் கல்வி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
கடந்த 35 ஆண்டுகளாக தாங்கள் அனுபவித்து வரும் 31.37 ஏக்கர் பரப்பளவிலான அரசு புறம்போக்கு நிலத்தை தங்களுக்கு ஒதுக்கும்படியும், வித்தியாச தொகையும் செலுத்தத்தயாராக இருப்பதாகவும் சாஸ்த்ரா பல்கலைக்கழகம் வைத்த கோரிக்கையை நிராகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்தது. மேலும், நான்கு வாரங்களுக்குள் இடத்தை காலி செய்யும்படி வட்டாட்சியர் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி சாஸ்த்ரா பல்கலைக்கழகம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என். மாலா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சாஸ்த்ரா பல்கலைக்கழகம் தரப்பில், ’அரசு நிலத்துக்குப் பதிலாக வேறு நிலத்தை மாற்றிக்கொள்ளும் வகையில் கடந்த மே மாதம் அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
அதன்படி மாற்று இடம் வழங்கத்தயாராக இருப்பதாகவும், அதற்கு அனுமதிக்க கோரி அரசுக்கு விண்ணப்பித்துள்ளதாகவும்’ தெரிவிக்கப்பட்டது. விண்ணப்பம் பரிசீலிக்கப்படுமா? என்பதை அரசு விளக்கினால், இந்த வழக்கை நடத்த ஏதுவாக இருக்கும் எனவும் கூறப்பட்டது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில், 'ஆக்கிரமிப்பின்மீது 35 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்க விடாமல் பல்கலைக்கழக நிர்வாகம் தடுக்கிறது, கட்டடத்திற்குச்சீல் வைக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் சிறுசிறு ஆக்கிரமிப்புகளை அகற்றச்சென்றால், முதலில் சாஸ்த்ரா ஆக்கிரமித்துள்ள நிலத்தை மீட்டெடுங்கள் என பொதுமக்கள் வலியுறுத்தி, எதிர்ப்பு தெரிவிப்பதாகவும்’ நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. நீர் நிலை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதால் மாற்று இடம் பெறும் அரசாணை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திற்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன்பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், சாஸ்த்ரா ஆக்கிரமித்துள்ள 30 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்தில் ஒரு பகுதி நீர்நிலை என்பதால், மே மாத அரசாணை பொருந்தாது என அரசு கூறுவதால், ஆக்கிரமிப்பு நிலம் நீர்நிலை தான் என்பதை நிரூபிப்பதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.
அரசின் நடவடிக்கையால், அங்கு தங்கி படிக்கின்ற மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்பதால், வழக்கு முடியும் வரை சாஸ்த்ரா பல்கலைக்கழக கட்டடங்கள் சென்னை உயர் நீதிமன்ற கட்டுப்பாட்டில் இருக்கும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 24ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழுவுக்கு எதிராக ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு: ஆக.10 ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு