சென்னை: நுங்கம்பாக்கத்தில் உள்ள வானிலை ஆய்வு மையத்தில், இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் இன்று (நவ. 17) செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, மேற்குத் திசையில் நகர்ந்து வரும் 18ஆம் தேதி தெற்கு ஆந்திரா - வட தமிழ்நாடு கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
இன்றைய நிலவரம்
இதன் காரணமாக, இன்று திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை (Heavy Rain) பெய்யக்கூடும்.
கள்ளக்குறிச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தென்காசி, தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, சேலம், டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவ. 18 நிலவரம்
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் நாளை (நவ. 18) இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, புதுச்சேரிப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், ஏனைய மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவ. 19 நிலவரம்
கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
சேலம், தர்மபுரி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை (Heavy Rain) பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவ. 20 நிலவரம்
திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நவ. 21 நிலவரம்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்
சென்னை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27, குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
சென்னையில் இயல்பை விட அதிக மழை
மேலும் வடகிழக்குப் பருவமழை, இதுவரை பெய்த மழையின் அளவு என்பது இயல்பை விட 54% அதிகம். சென்னையில் 49 செ.மீ., மழைப்பொழிவு என்பது இயல்பானது. ஆனால், இதுவரை 81 செ. மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்றும் நாளையும்
வங்க கடல் பகுதிகளான மத்திய, மேற்கு, தென்மேற்கு வங்க கடல், தெற்கு ஆந்திரா மற்றும் வட தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்'' என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: Pongal 2022 : தைப் பொங்கல் சிறப்பு தொகுப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு