சென்னை : பல்லாவரம், பம்மல் குன்றத்தூர் ஆகிய பகுதிகளில் திருடு போன மற்றும் தொலைந்து போன தங்களது செல்போன்களை உடனடியாக கண்டு பிடித்து தருமாறு போலீசாரிடம் உரிமையாளர்கள் புகார் அளித்து இருந்தனர்.
இதனையடுத்து உதவி ஆணையாளர் தலைமையில் ஐந்து பேர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக தனிப்படை போலீசார் காணாமல் போன செல்போன்களின் ஐ.எம்.இஐ நம்பரை வைத்து விசாரணை நடத்தினர். இதில் காணாமல் போன செல்போன்கள் ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உபயோகப் படுத்தப்பட்டு வருவது தெரியவந்தது.
அதன் அடிப்படையில் பல்லாவரம் தனிப்படை போலீசார் ஆந்திரா, கர்நாடக சென்று பல்வேறு நபர்களிடம் இருந்து காணாமல் போன செல்போன்களை மீட்டனர். இவ்வாறு மொத்தம் 57 செல்போன்கள் இதுவரை மீட்கப்பட்டது. இதனையடுத்து அந்த செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் காணாமல் போன பல செல்போன்களையும் கண்டுபிடிக்கும் பணியில் தொடர்ந்து தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் அவையும் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று பல்லாவரம் காவல் உதவி ஆணையாளர் ஆரோக்கிய ரவீந்திரன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சிவகங்கையில் இளைஞர் வீட்டில் என்ஐஏ சோதனை