தருமபுரி மாவட்டம் சின்ன காணஹல்லி கிராமத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமி, தனது குழந்தைகளுக்கு பழங்குடியினர் பிரிவு சாதி சான்றிதழ் வழங்கக் கோரி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியரிடம் கொடுத்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. பின்னர், மாநில கூர்நோக்கு பரிசீலனை குழுவுக்கு விண்ணப்பித்த ஜெயலட்சுமியின் குழந்தைகளுக்கு, சாதி சான்றிதழ் வழங்க உத்தரவிடப்பட்டது.
ஆனாலும், பழங்குடியினர் சான்றிதழை வருவாய் கோட்டாட்சியர் வழங்காததால், ஜெயலட்சுமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை கடந்த 11ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி மற்றும் ஆர். சுரேஷ்குமார் அமர்வு, அதிகாரிகளின் செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்ததோடு, கூர்நோக்கு குழு பரிந்துரைத்த பிறகும் சாதி சான்றிதழ் வழங்காதது ஏன் என கேள்வி எழுப்பியது.
மேலும், சாதி சான்றிதழ் கேட்டு ஜெயலட்சுமி விண்ணப்பிக்கும் போது பணியில் இருந்த வருவாய் கோட்டாட்சியர் மற்றும் தற்போதைய வருவாய் கோட்டாட்சியர் ஆகிய இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், விண்ணப்பிக்கும் போது பணியில் இருந்த வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழிக்கு 50 ஆயிரம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் இருந்து காணொலி மூலம் ஆஜரான இரண்டு அதிகாரிகளும், நீதிபதிகளிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினர்.
மேலும், நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கடந்த 12ஆம் தேதி ஜெயலட்சுமியிடம் சாதி சான்றிதழ் வழங்கப்பட்டு விட்டதாகவும் விளக்கமளித்தனர். மேலும், தனக்கு விதிக்கப்பட்ட அபராத உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்ற வருவாய் கோட்டாட்சியர் தேன்மொழியின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அவருக்கு விதிக்கப்பட்ட அபராத உத்தரவை திரும்பப் பெற்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கை ரத்து செய்யக்கோரிய வழக்கில் புதனன்று விசாரணை