இது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார், தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ மனுஸ்மிருதியில் உள்ளதை மேற்கோள் காட்டியதற்கு விசிக தலைவர் திருமாவளவன் மீது வழக்கு; போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்புக்கு நிதிக்குறைப்பு; அமைச்சரவையிலும், நிர்வாகத்திலும் ஆதிதிராவிடர்கள் புறக்கணிப்பு;
எஸ்சி இட ஒதுக்கீட்டை உயர்த்த மறுப்பு; எத்தனையோ புகார்கள் கொடுத்தும் வெறுப்பு பிரச்சாரகர்கள் மீது வழக்குப்பதிய மறுப்பு; தலித் மக்கள் மீதான தாக்குதல்களும், ஆணவக் கொலைகளும் அதிகரிப்பு; உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் மாநில எஸ்சி ஆணையம் அமைக்காமல் இழுத்தடிப்பு; உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் பஞ்சாயத்து துணைத்தலைவர், செயலர் பதவிகளில் இட ஒதுக்கீடு அளிக்க மறுப்பு.
ஆனால், ஒரே நாளில் அவசர அவசரமாக ஆணையம் அமைப்பு; அதிமுக அரசின் அணுகுமுறையை ஆதிதிராவிடர்கள் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் “ என்று குறிப்பிட்டுள்ளார்.
வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி நேற்று சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டபின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்துப் பேசினார். அதையடுத்து தமிழ்நாட்டில் சாதிவாரியாக புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வகையில் அதெற்கென ஆணையம் ஒன்று உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இதையும் படிங்க: இட ஒதுக்கீடு குறித்து நல்ல முடிவு! - முதலமைச்சர் தெரிவித்ததாக அன்புமணி தகவல்!