துக்ளக் பொன்விழாவில் கலந்துகொண்ட ரஜினிகாந்த், 1971ஆம் ஆண்டு சேலத்தில் பெரியார் தலைமையில் திராவிடர் கழகம் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோரின் நிர்வாண படங்களுக்கு செருப்பு மாலை அணிவித்ததாகவும் அதை துக்ளக் இதழ்தான் வெளியிட்டதாகவும் பேசினார்.
ஆனால், இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், ’நான் பத்திரிகையில் பார்த்தைத்தான் சொன்னேன். பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது. இது மறுக்கக்கூடிய சம்பவம் இல்லை. மறக்க வேண்டிய சம்பவம்’ என்று பேசினார்.
ரஜினிகாந்த் துக்ளக் விழாவில் பேசியபோது சந்தித்த எதிர்ப்பைவிட, மன்னிப்பு கேட்க முடியாது என ஆணித்தரமாக கூறியதை அடுத்து அவருக்கு எதிர்ப்பு வலுத்துவருகிறது. அந்த வகையில், ரஜினியின் கருத்துக்கு தமிழ்நாடு அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திரமான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.
ஓபிஎஸ் (அதிமுக ஒருங்கிணைப்பாளர்):
தந்தை பெரியார் கருத்துக்கள் கோபுரத்தில் வைக்கப்பட வேண்டியவை. என்னை போன்ற எளியவர்கள் இந்த நிலைமைக்கு வர பெரியார்தான் காரணம். எனவே அவர் கருத்துக்கள் குறித்து பேசும்போது முழுமையாக தெரிந்துகொண்டு பேசவேண்டும்.
மு.க. ஸ்டாலின் (திமுக தலைவர்):
ரஜினிகாந்த் அரசியல்வாதி இல்லை, அவர் ஒரு நடிகர். பெரியார் பற்றி ரஜினி சிந்தித்து பேச வேண்டும்.
இதையும் படிங்க: பெரியார் குறித்து ரஜினி சிந்தித்து பேசவேண்டும் - மு.க. ஸ்டாலின்
ஜெயக்குமார் (அமைச்சர்):
தமிழ்நாட்டில் எல்லோராலும் மதிக்கப்படுகின்ற தலைவர் பெரியாரைப் பற்றி அவதூறாக ரஜினிகாந்த் பேசியிருப்பது நிச்சயம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இதையும் படிங்க: பெரியார் எதிர்ப்பு அரசியலில் ரஜினிகாந்த் ஈடுபடுகிறாரா? - பதில் அளிக்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்...
திருமாவளவன் ( விசிக தலைவர்):
பெரியாரை எதிர்த்தவர்கள் தமிழ் மண்ணில் குப்புற வீழ்ந்து கிடக்கிறார்கள். அவரை எதிர்க்க முயற்சித்து பார்த்த அனைவரும் மூக்குடைபட்டு கிடக்கிறார்கள். பெரியார் வாழ்க என்று ரஜினி சொல்லும் காலம் விரைவில் வரும்.
வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்):
ரஜினி கூறியது போன்றதொரு சம்பவம் ஒன்று நடக்கவில்லை என்று திராவிடர் கழகத்தினர் சொல்லியிருக்கிறார்கள். நடிகர் ரஜினிகாந்த் வைத்திருந்த பத்திரிகையின் நிருபர் தவறான தகவலை அளித்திருக்கலாம். அந்த தகவல் தமக்கு தவறான தகவல்களாக தெரிவதாக கூறிவிட்டு, அப்படி சொன்னதற்காக வருந்துகிறேன் என்று கூறியிருந்தால் அவரது மதிப்பு இன்னும் கூடியிருக்கும். ஆனால் அதற்கு மாறாக அவர் பதிலளித்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ‘வருத்தம் தெரிவித்திருந்தால் ரஜினியின் மதிப்பு கூடியிருக்கும்’ - வைகோ
உதயநிதி ஸ்டாலின் (திமுக இளைஞரணித் தலைவர்):
ரஜினிகாந்த் தெரியாமல் பேசுகிறார். உண்மை தெரிந்த பிறகு மன்னிப்பு கேட்பார். காவிரி விவகாரம் தொடர்பாக பேசிவிட்டு பின்பு உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்பு கேட்டார். அதைபோல் பெரியார் தொடர்பான தனது கருத்திலும், உண்மை தெரிந்த பின்னர் மன்னிப்புக் கேட்பார்.
இதையும் படிங்க: ரஜினி மன்னிப்பு கேட்பார் - உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம்
கொளத்தூர் மணி (திராவிடர் விடுதலைக் கழகம்):
மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினி கூறியது அவரது உரிமை. தவறு நடந்துவிட்டால் மன்னிப்பு கேட்பது என்பது மனித பண்பு.
இதையும் படிங்க: ‘யோக்கியர் என்றால் துக்ளக் ஆதாரத்தைக் காட்டியிருக்க வேண்டும்’ - கொளத்தூர் மணி காட்டம்
சுப.வீரபாண்டியன் (திராவிடர் கழக தமிழர் பேரவை):
"ரஜினி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று நான் ஒருபோதும் வலியுறுத்தவில்லை. அது உண்மைக்கு மாறான செய்தி என்றால் அதற்கு எந்த உள்நோக்கமும் இல்லை. நான் கேள்விப்பட்டதை சொன்னேன் என்று ரஜினி கூறினால் போதும் என்றே நான் கூறியிருந்தேன். மன்னிப்பு கேட்பதும், கேட்காமலிருப்பதும் அவரைச் சார்ந்தது. அதுகுறித்து நான் எதையும் வலியுறுத்தவில்லை. ஆனால் அடிப்படையில் என்ன ஆதாரம் என்பதை அவர் இப்போதாவது வெளியிடட்டும். ஆதாரம் என்று ரஜினி கூறுவதை கையில் வைத்திருக்கிறாரே தவிர அதனை அவர் வெளியிடவில்லை. ஏனென்றால், ஆர்எஸ்எஸ் தரப்பிலிருந்து பல போலியான ஆதாரங்கள் வெளிவந்துகொண்டிருக்கிறன. அதில் ஒன்றாகவும் அது இருக்கலாம்.
இதையும் படிங்க: ரஜினி கையில் ஆர்எஸ்எஸ் ஆதாரம்? - சுப.வீரபாண்டியன் சிறப்புப் பேட்டி
அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன்னரே பெரியார் குறித்து அவதூறாக பேசியிருப்பதால் ரஜினிகாந்த் அரசியல் களத்திலும், பொது தளத்திலும் இவ்வளவு பெரிய எதிர்ப்பை சந்தித்துவருகிறார். அவருக்கு தமிழ்நாட்டில் பாஜகவைத் தவிர பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துவருகின்றன.
அதுமட்டுமின்றி, அரசியலுக்கு இதோ வருகிறேன் அதோ வருகிறேன் என இழுத்தடித்து ஒருவழியாக போருக்கு தயார் என அறிவித்த பின்பு ரஜினி, இப்படி பெரியார் எதிர்ப்பு அரசியலை தமிழ்நாட்டில் முன்னெடுத்திருப்பதை அவரது ரசிகர்களும் ரசிக்கவில்லை என்பதே கள யதார்த்தம்.
ஏனெனில், தன்னை எதிர்த்து யார் போர் புரிந்தாலும், பெரியார் அதனை தனது சித்தாந்தம் என்ற ஒற்றைத் தடி கொண்டு தோற்கடிப்பார் என்பதுதான் இதுவரை தமிழ் மண் சொல்லிக்கொண்டிருக்கும் வரலாறு.