சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க கெளரவ செயலாளர் மன்னன் மனு ஒன்றை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.
அதில், “தங்கள் சங்கம் 1979ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இச்சூழலில், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் (Tamil film active producers association) என்ற பெயரிலும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ( Tamilnadu movie makers sangam) என்ற பெயரிலும் இரு புதிய சங்கங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களால் தொடங்கப்பட்டுள்ள இந்தச் சங்கங்கள் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டப்படி, ஒரு சங்கத்தின் பெயரை சார்ந்த பெயருடன் எந்த சங்கத்தையும் பதிவு செய்யக் கூடாது என்பதால், இரு சங்கங்களின் பதிவை ரத்து செய்யக் கோரி சென்னை சங்கங்கள் பதிவாளர்களுக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
எனவே தனது மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், மனுவுக்கு ஏப்ரல் 8ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, சென்னை தெற்கு மற்றும் மத்திய மாவட்ட சங்கங்கள் பதிவாளர்களுக்கும், தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளார்.