கரோனா தொற்று அதிகம் உள்ள சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டலம் தவிர, தமிழ்நாட்டின் மற்றப் பகுதிகளில் இன்று (ஜூன் 1) முதல் குறைந்த அளவு பயணிகளுடன், தகுந்த இடைவெளியை கடைப்பிடித்து பேருந்துகள் இயக்க தமிழ்நாட்டில் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையில் 60 விழுக்காடு இருக்கைகளில் மட்டுமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், தனியார் பேருந்துகள் இன்று (ஜூன் 1) சேவையைத் தொடங்கவில்லை. இதனால், தங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்பதால், தற்போது பேருந்துகளை இயக்கவில்லை என தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது; 'பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றி, கூடுதல் பயணிகளுடன் பேருந்துகளை இயக்க அனுமதியளிக்க வேண்டும்; கடன்கள், தவணைத் தொகை செலுத்தும் கால அவகாசத்தை ஆறு மாத காலம் ஒத்தி வைக்க வேண்டும்; மூன்று மாதத்திற்குச் சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் 'அரசிடமிருந்து இது தொடர்பாக உத்தரவாதம் பெற்ற பிறகே மீண்டும் பேருந்துகள் இயக்கப்படும். தற்போதைய சூழலில் பேருந்துகளை இயக்கினால் பயணிகளிடம் இருந்து இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பதால், ஒரு மாதகாலத்திற்குப் பேருந்துகள் இயக்கப்படாது' என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறினார்கள்.