இது தொடர்பாக திங்கட்கிழமையன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
“சமூக நீதிக்கும், கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும் எதிரான நீட் தேர்வு உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தான் நடத்தப்படுவதாகவும், அது ரத்து செய்யப்படுவதற்கு வாய்ப்பே இல்லை என்றும் மத்திய அரசின் சார்பில் தொடர்ந்து வாதிடப்பட்டு வருகிறது. ஆனால், நீட் தேர்வு நீடிக்க வேண்டும் என்பதற்கு எந்த நியாயமும் உச்சநீதிமன்றத்தால் கற்பிக்கப்படவில்லை என்பது தான் உண்மையாகும்.
நீட் தேர்வு ஒட்டுமொத்த தமிழகத்திற்கும் எதிரானது; சமூகநீதிக்கு எதிரானது என்பதை நிரூபிக்க ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வில் 39.56% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்ற நிலையில், இந்த ஆண்டு அதைவிட 9.01% அதிகமாக 48.57% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது போன்ற புள்ளிவிவரங்கள் எல்லாம் நமக்கு நாமே திருப்தி அடைவதற்கு வேண்டுமானால் உதவுமே தவிர, பெருமைப்பட்டுக் கொள்ள எந்த வகையிலும் உதவாது. நடப்பாண்டில் நீட் தேர்வில் 300-க்கும் கூடுதலான மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை 14,443 ஆகும். இவர்களில் 8688 பேர் 12ஆம் வகுப்பைக் கடந்த ஆண்டு முடித்த பழைய மாணவர்கள் ஆவர்.
நீட் தேர்வு ரத்து என்று அளிக்கப்பட்ட தீர்ப்பு செல்லாது என்று 2016-ஆம் ஆண்டில் அரசியலமைப்பு சட்ட அமர்வு பிறப்பித்த ஆணை, நீட் தேர்வுக்கு எதிரான வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வரைக்கான இடைக்கால ஏற்பாடு தான் என்பதைச் சட்ட வல்லுநர்கள் அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். அத்தீர்ப்பு அளிக்கப்பட்ட அடுத்த சில மாதங்களில் நீட் தேர்வுக்கு எதிரான முதன்மை வழக்கு விசாரிக்கப்பட்டு இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மூன்றரை ஆண்டுகள் ஆன பிறகும் அந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படாததும், இடைக்கால ஏற்பாடாக வழங்கப்பட்ட தீர்ப்பை வைத்துக் கொண்டு தொடர்ந்து நீட் தேர்வு நடத்தப்படுவதும் அறமல்ல.
2016-ஆம் ஆண்டு நீட் வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட காலகட்டத்திற்கும், இப்போதைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இடைப்பட்ட மூன்றரை ஆண்டுகளில், நீட் தேர்வின் நோக்கங்கள் எதுவும் நிறைவேறவில்லை என்பது உறுதியாகி விட்டது. இத்தகைய சூழலில் நீட் தேர்வுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்; இல்லாவிட்டால் அந்த வழக்கு விசாரித்து முடிக்கப்படும் வரை நீட் தேர்வை நிறுத்தி வைக்க வேண்டும். நீட் வழக்கில் தமிழக அரசும் ஒரு தரப்பு என்பதால் அவ்வழக்கை விரைந்து விசாரணைக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.