சென்னை: சென்னையில் உள்ள அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வலி நிவாரண மையம் மற்றும் நோய் தணிப்புப் பிரிவை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு ஆகியோர் இன்று (ஜன.25) தொடங்கிவைத்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறும்போது, "முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிருஷ்ணகிரி மாவட்டம், சாமனப்பள்ளியில் கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி 'மக்களைத் தேடி மருத்துவம்' எனும் மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்து, உலகத்திற்கே ஒரு உன்னதமான மருத்துவ சேவைக்கு வழிகாட்டினார்.
மக்களை தேடி மருத்துவம்
மாநில அளவில் நேற்று (ஜனவரி 24) வரை இந்த மருத்துவ சேவையைப் பெற்று 46 லட்சத்து 37 ஆயிரத்து 974 பேர் பயனடைந்துள்ளனர். இதில், தொடர் சேவைகள் பெற்றவர்களின் எண்ணிக்கை 37 லட்சத்து 18 ஆயிரத்து 143.
இதில் நோய் ஆதரவு சிகிச்சை பெற்றவர்கள் 1 லட்சத்து 68 ஆயிரத்து 75. அதில் தொடர் சேவை பெற்றவர்கள் 1 லட்சத்து 20 ஆயிரத்து 335 பேர்.
இத்தகைய, சிறப்பான திட்டத்தில் ஒன்றான நோய் ஆதரவு சிகிச்சை சேவை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று (ஜன.25) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு சிகிச்சைகள்
இத்திட்டம் வலி நிவாரண மையம் மற்றும் நோய் தணிப்புப் பிரிவில், பிரத்யேகமான புறநோயாளிகள் மற்றும் 15 படுக்கைகள் கொண்ட உள்நோயாளிகள் பிரிவு, அதிநவீன அல்ட்ராசவுண்ட் கருவி, உடல் முழுவதும் ஏற்படும் நரம்பு வலிக்கான சிகிச்சை மற்றும் நீண்ட நாள்களாக உள்ள புற்றுநோய் வலி உள்ளிட்ட எல்லாவிதமான வலிகளுக்கு சிகிச்சைகள் அளிக்கப்படும்.
மேலும், வலி நரம்புகளை கட்டுப்படுத்துதல், வலி நரம்புகளை முடக்குதல், ரேடியோ அலை நரம்பு சிதைப்பு சிகிச்சை, வலி இருக்கும் குறிப்பிட்ட பகுதிக்கு வலி நிவாரண மருந்து செலுத்துதல், தொடர்ந்து வலி நிவாரண மருந்து அளித்தல் மற்றும் நுண்மிண்னணியில் சிறப்பு சிகிச்சைகளான சிகிச்சை வழங்கப்படுகிறது.
முற்றிலும் இலவசம்
இந்த வலி நிவாரண சிகிச்சை அனைத்தும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது.
அதிநவீன அல்ட்ராசவுண்ட் கருவி, ரத்தத்தில் உயிர்வேதியியல் அளவுகளை துல்லியமாக கணக்கிடும் தானியங்கி கருவி ஆகியவையும் நிறுவப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு, அரசு ஓமந்தூரார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: விஜய் குறித்து நீதிபதி குறிப்பிட்ட கருத்துகள் நீக்கம்!